ஆர்.கே.நகரில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்நிலையில், அவர் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார். எனவே, அந்த தொகுதி தற்போது காலியாக இருக்கிறது. வருகிற ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அதிமுக சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் யார் போட்டியிடுகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதில், தினகரனே போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதேசமயத்தில் கலைராஜன், ஆதிராஜாராம், கோகுல இந்திரா உள்ளிட்ட பெயர்களும் அடிபட்டது. இந்நிலையில் அதிமுகவின் ஆட்சி மன்ற குழு இன்று காலை கூடுகிறது. அதில், ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் யார் என அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
அதன்படி, தற்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறேன் என கூறினார்.மேலும், இரட்டை இலை சின்னத்தில் நான் போட்டியிடுகிறேன். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என கூறினார்.