அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேரியவர்கள் அவர்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ட்ரம்ப் அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கொலம்பியா நாட்டைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி இருந்தார்கள். அவர்களை தனி விமானம் மூலம் கொலம்பியா நாட்டிற்கு திருப்பி அனுப்பியது.
ஆனால் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சட்டவிரோத குடியேறியவர்கள் உள்ளடக்கிய இரண்டு விமானங்களை கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ ஏற்க மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இதனை அடுத்து, கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அனைத்திற்கும் 25% வரி உயர்த்தி இருப்பதாக டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், ஒரு வாரத்திற்குள் சட்டவிரோத குடியேறியவர்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் வரியை 50 சதவீதமாக உயர்த்த உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கொலம்பிய அரசு அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதித்ததோடு, அவர்களது விசாக்களையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டிரம்ப் அரசு பதவி ஏற்றதிலிருந்து, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 18,000 இந்தியர்களை இந்திய அரசு திரும்ப அழைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.