Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.நா. தீர்மானத்தை புறக்கணிக்க முடியாது: இலங்கை அதிபர் சிறிசேனா

ஐ.நா. தீர்மானத்தை புறக்கணிக்க முடியாது: இலங்கை அதிபர் சிறிசேனா
, சனி, 24 அக்டோபர் 2015 (11:42 IST)
போர் குற்ற விசாரணை குறித்த ஐ.நா. தீர்மானத்தை நிராகரிக்க முடியாது என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறியுள்ளார்.
 
போர் குற்றம் தொடர்பாக ஐ.நா. தீர்மானம் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிகளின் கூட்டத்திற்கு இலங்கை அதிபர் சிறிசேனா அழைப்பு விடுத்திருந்தார்.
 
இந்த அழைப்பை ஏற்று, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற 20 கட்சிகள் கலந்து கொண்டன. இந்த கூட்டம் இலங்கை அதிபர் சிறிசேனா தலைமையில் நேற்று கொழும்பில் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா பேசுகையில், "ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மூலமாக இலங்கை விஷயத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் மற்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
 
தற்போது உள்ள நிலையில் நாட்டில் தனிப்பட்ட கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. நாங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
 
ஐ.நா. தீர்மானம் தொடர்பாக, ஒரு அரசு என்ற வகையிலும், இலங்கையின் பிரதான கட்சி என்ற வகையிலும் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் எங்களால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன்.
 
இதை எப்படி முன்னெடுத்து செல்வது என்பது தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைகளையும் ஏற்று செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
 
சில அரசியல்வாதிகள் நாங்கள் ஐ.நா. தீர்மானத்தை முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அத்துடன் சில ஊடகங்களும் இந்த கருத்தை முன்வைக்கின்றன.
 
ஆனால், ஐ.நா. தீர்மானத்தை நாம் புறக்கணிப்பதால் மட்டும் இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுவிடமுடியாது. எனவே நமது அரசியலமைப்பிற்கு எற்ப இந்த விஷயம் குறித்து நாம் ஆராயவேண்டும் என்று விரும்புகிறேன்.
 
இலங்கை விஷயத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி, 2014 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி ஆகிய காலக்கட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 
ஆயினும், அதற்கும், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன. அதை கருத்தில் கொண்டு ஐ.நா. அறிக்கையில் மிகப்பிரதானமாக குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்.
 
ஐ.நா. பரிந்துரைகளில் பிரதானமாக இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாத்தல், நல்லாட்சிக்கான கட்டமைப்புக்களை வலுப்படுத்துதல், ஊழல் மோசடி தொடர்பான விழிப்புணர்வு, வடக்கு மற்றும் கிழக்கில் சிவில் பாதுகாப்பையும், வளர்ச்சி பணிகளையும் மேம்படுத்துதல், கண்ணி வெடிகளை அகற்றுதல், மறுகுடியேற்றம், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி படுத்துதல், பலவந்த ஆள் கடத்தல்களை நிறுத்துதல் ஆகியவற்றுடன், இலங்கை அரசினால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கூறிய உண்மையை கண்டறிதல் மற்றும் காணாமல்போனவர்களை தேடுதல் தொடர்பான செயலகம் நிறுவுதல், உள்ளிட்டவை அடங்கிய சர்வதேச சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் அடங்கியுள்ளன.
 
இந்நிலையில்,  ஐ.நா. தீர்மானத்தை நிராகரிக்காமல் அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து நாம் கலந்தாலோசிப்போம். அனைத்துக்கட்சிகளின் ஆலோசனைக்கும் ஏற்ப இதை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பது குறித்து நாம் இறுதி முடிவை எடுப்போம்.
 
இது நமது முதல் சந்திப்புதான். இதேபோல நாம் பலமுறை சந்தித்துப் பேச வேண்டும். அனைத்து கட்சிகளின் ஆலோசனைகள் நமக்கு தேவைப்படும் என்பதால், நாம் துணைக்குழுக்களை அமைத்து ஆராயவும் ஏற்பாடு செய்யலாம். இது என்னுடைய ஒரு கருத்து.
 
இதேபோல, ஒவ்வொரு கட்சிகளின் தனிப்பட்ட கருத்துக்களையும் எனக்கு 2 வாரத்திற்குள் எழுத்து மூலம் எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
நாம் எந்த முயற்சியை மேற்கொண்டாலும், அது நமது நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாரு செய்வோம், அரசியல் அமைப்புக்கு ஏற்ப நாம் இந்த பணிகளை முன்னெடுத்து செல்வோம்" என்று சிறிசேனா அப்போது கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil