அமெரிக்காவில் தீபாவளி கொண்டாடிய இந்தியர்கள் பல இடங்களை குப்பையாக்கி உள்ள வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரும் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி உலகம் முழுவது சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் 27ம் தேதியும், வட மாநிலங்களில் 28ம் தேதியும் தீபாவளி கொண்டாடப்பட்டது.
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களும் தீபாவளி திருநாளை கோலாகலமாக கொண்டாடினர். அமெரிக்காவின் நியூஜெர்ஸி பகுதியில் ஏராளமான இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு பலர் பல வகையான பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடியிருக்கின்றனர். தீபாவளி முடிந்து சாலையெங்கும் வெடி குப்பைகள் நிரம்பி கிடந்துள்ளன. மேலும் சாலைகள் முழுவதும் வெடிமருந்துகள் அப்பி கிடந்திருக்கிறது.
அவற்றை தண்ணீர் ஊற்றி முழுவதுமாய் சுத்தம் செய்துள்ளனர் நியூஜெர்ஸி போலீஸார் மற்றும் தீயணைப்பு துறை. இதை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவர் “இந்தியன் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.