அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கியுள்ள நிலையில், திடீரென வெள்ளை மாளிகைக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்து, தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட கமலா ஹாரிஸ் அதிபர் ஆவதற்கு வாய்ப்பே இல்லை எனத் தேர்தல் முடிவுகள் கூறுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அனைத்து கருத்துக்கணிப்புகளும் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என்று கூறிய நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் இருப்பது அமெரிக்க மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கடந்த முறை தேர்தல் நடைபெற்ற போது, தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்தபோதே வெள்ளை மாளிகை நோக்கி ஆயிரக்கணக்கானோர் வந்ததால் கண்ணீர் புகை குண்டு வீசி, தடியடி நடத்தி கூட்டத்தினர் விரட்டப்பட்டனர்.
அதேபோன்ற ஒரு அசம்பாவித சம்பவம் இந்த முறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளை மாளிகை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.