ஜெர்மனியில் 5 வது சிறுவன் ஒருவன் தன் தாத்தாவின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல், சொர்க்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளான். அதற்கு பதில் கடிதமும் தாத்தா பேரனுக்கு அனுப்பியுள்ளார்.
ஜெர்மனியில் உள்ள ரஷ்னிலெண்டு பிளாடினேட் என்ற மாகாணத்தில் 5 வயது சிறுவன் சொர்க்கத்தில் உள்ள தாத்தாவுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளான்.
சில வாரங்களுக்கு முன்னர் அந்த சிறுவனின் தாத்தா உயிரிழந்தார். இந்த பிரிவை சிறுவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில், சில தினங்களுக்கு அந்த சிறுவன் தாத்தாவுக்கு கடிதம் ஒன்றை எழுதி அதை ஒரு பலூனில் கட்டி வானில் பறக்க விட்டான்.
கடிதத்தில், ‘அன்புள்ள தாத்தா, உங்களது இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சொர்க்கத்தில் நீங்கள் நலமாக இருக்கறீர்களா? அங்குள்ள மற்றவர்கள் உங்களை கவனிப்பாக பார்த்துக்கொள்கிறார்களா?’ என உருக்கமுடன் எழுதியுள்ளான்.
இதையடுத்து, நேற்று காலை அந்த சிறுவனின் வீட்டில் கடிதங்களை வைக்கும் பெட்டியில் ஒரு கடிதமும், ஒரு கரடி பொம்மையும் இருந்துள்ளது.
அந்த கடிதத்தில், ‘அன்புள்ள பேரனே, நான் இங்கு சொர்க்கத்தில் நலமாக இருக்கிறேன். நீ பலூனில் அனுப்பிய கடிதம் எனக்கு கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. ஆனால், உன்னை பிரிந்த இழப்பை என்னாலும் தாங்க முடியவில்லை.
என்னை பற்றி இனி கவலைப்பட வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். கரடி பொம்மை உன்னிடம் இருக்கும்போது எல்லாம் நான் உன்னிடம் இருப்பது போல் உனக்கு இருக்கும். மிஸ் யூ’ என உருக்கமான பதில் கடிதம் எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து அந்த சிறுவனின் தாயார் கூறியதாவது:-
கடிதத்தை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தோம். பலூனை பார்த்துவிட்டு எனது மகனின் ஏக்கத்தை போக்க யாரோ ஒரு நபர் இந்த கடிதத்தையும் பரிசையும் அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால், இந்த கடிதத்தில் அனுப்புனர் முகவரி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனினும், எனது மகனின் பாசத்திற்கு பதில் அனுப்பிய அந்த முகம் தெரியாத நபருக்கு என்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.