ஹாரி பாட்டர் மற்றும் டவுன்டன் அபே ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்ற மேகி ஸ்மித், வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 89.
1934 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தவர் மேகி ஸ்மித். இவர் மேடை நாடகங்களிலும் புகழ்பெற்றவர். 1963 ஆம் ஆண்டு வெளியான தி வி.ஐ.பி.எஸ் திரைப்படத்தின் மூலம் மேகி ஸ்மித் அறிமுகமானார். மேகி ஸ்மித்தின் திரைப்பட வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. மேலும் அவர் மிகச்சிறந்த பிரிட்டிஷ் நடிகைகளில் ஒருவராகவும் கருதப்பட்டார்.
மேகி ஸ்மித், ஹாரி பாட்டர் திரைப்படத் தொடரில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல் கதாபாத்திரத்திலும், டவுன்டன் அபேயில் கூர்மையான நாக்கு கொண்ட டோவேஜர் கவுண்டஸ் கதாபாத்திரத்திலும் நடித்து புகழ்பெற்றார். தன் வாழ்நாளில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார்.
அதிகாலை காலமானார்:
இந்நிலையில் வயது மூப்பு காரணமாக மேகி ஸ்மித் காலமானார். இதுகுறித்து அவரது மகன்கள் டோபி ஸ்டீபன்ஸ் மற்றும் கிறிஸ் லார்கின் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், மேகி ஸ்மித்தின் மரணமடைந்ததை நாங்கள் மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 27 (வெள்ளிக்கிழமை) அதிகாலை மருத்துவமனையில் அவர் காலமானார் என்று குறிப்பிட்டுள்ளனர்.
அவர் உயிரிழக்கும் தருவாயில் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரின் நண்பர்கள் உடனிருந்தனர் என்றும் இரண்டு மகன்கள் மற்றும் 5 பேரக்குழந்தைகளை விட்டுச்சென்றுள்ளார் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் பாட்டியின் இழப்பு பேரக்குழந்தைகளுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்..