பொதுமக்களின் வருகை அதிகரித்ததை அடுத்து சீனாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட கண்ணாடி பாலம் மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே நீளமான கண்ணாடி பாலம் சீனாவில் உள்ள ஹுனான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 2 மலைகளுக்கு இடையே 300 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. 2 மலைகளிலும் தூண்கள் அமைக்கப்பட்டு அதை இரும்பு கம்பியால் ஒன்றாக இணைத்து பாலத்தை உருவாக்கி உள்ளனர். அதன் நடுப்பகுதியில் முழுக்க முழுக்க கண்ணாடிகள் பொறுத்தப்பட்டுள்ளன.
அந்த கண்ணாடியில் நடந்து சென்றால் கீழே உள்ள காட்சிகள் நன்றாக தெரியும். அந்த கண்ணாடி உடைந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும். ஆனாலும், அது உடைந்து விடாதபடி வலுவாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மொத்த நீளம் 430 மீட்டர். 6 மீட்டர் அகலத்தில் பாலம் இருக்கிறது.
தினமும் 8 ஆயிரம் பேர் மட்டும் பாலத்தில் நடந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் அதிக அளவில் வருகை தந்த நிலையில் தற்போது இந்த பாலம் 2 வாரங்கள் மூடப்படுவதாக அறிவிக்கபட்டு உள்ளது.
இது குறித்து நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், தினமும் 8000 பார்வையாளர்கள் வரை வருவார்கள் என நினைத்திருந்த நிலையில் கட்டுக்கடங்காத பார்வையாளர்களின் வருகை காரணமாகவே பாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது., மற்றபடி கண்ணாடி பாலத்தில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.