புருனே மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறை சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில் இன்று அவர் புருனே நாட்டு மன்னரை சந்தித்ததாகவும் இந்த சந்திப்பின்போது சில முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு பயணமாக தென்கிழக்கு ஆசிய நாடான புருனே மற்றும் சிங்கப்பூர் சென்ற நிலையில் புருனே மன்னரை அவர் சற்றுமுன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு இடையே தூதரக உறவு தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் கொண்டாடப்படுவதை அடுத்து ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் பிரதமர் மோடியை பட்டத்து இளவரசர், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் சந்தித்ததாகவும் இந்திய தூதரகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வளாகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து பிரதமர் மோடி மற்றும் புருனே மன்னர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் இந்த பேச்சு வார்த்தையில் மன்னர் குடும்பத்தினரும் உடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இருநாட்டு பாதுகாப்பு, விண்வெளி, தொழில்நுட்பம் உள்ளிட்டவைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புருனே மன்னர் எங்களது பேச்சுவார்த்தை பரந்த அளவில் இருந்தது, இருநாடுகளுக்கு இடையே உறவுகளை மேம்படுத்தும் வழிகளை உருவாக்கி உள்ளோம் , வர்த்தக உறவுகள் மற்றும் வர்த்தக இணைப்புகள் விரிவுபடுத்த போகிறோம் என்று தெரிவித்துள்ளார்.