Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதித்யா எல்1: சூரியனை ஆராய்ச்சி செய்வதால் இந்தியாவுக்கு என்ன பலன்?

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2023 (21:00 IST)
சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1- விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ தயாராகி வருகிறது.
 
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வரலாற்றில் முதல்முறையாக சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்டுள்ளது.
 
இன்று காலை 11:50 மணிக்கு பி.எஸ்.எல்.வி எக்ஸ்.எல் ராக்கெட் மூலமாக ஆதித்யா-எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
 
ஆதித்யா - எல்1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து உரையாற்றிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் , “ஆதித்யா-எல்1 திட்டத்தை மேற்கொள்வதற்காக மிகவும் வித்தியாசமான பணி அணுகுமுறையை செய்த பிஎஸ்எல்விக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இனி, மிஷன் அதன் பயணத்தை எல்1 புள்ளியில் இருந்து தொடங்கும். இது கிட்டத்தட்ட 125 நாட்களைக் கொண்ட மிக நீண்ட பயணம்,” என்றார்.
 
ஆதித்யா-எல்1 விண்கல திட்டத்தின் இயக்குநரான தமிழ்நாட்டைச் சேர்ந்த நிகர் சாஜி பேசுகையில், “கனவு நிஜமாகி உள்ளதைப் போன்ற நிலை இது. பிஎஸ்எல்வி மூலம் ஆதித்யா-எல்1 விண்ணில் செலுத்தப்பட்டது மகிழ்ச்சியை தருகிறது.
 
சூரியனைப் பற்றி ஆராய்வதன் மூலம் என்ன பயன்?
நாம் வாழும் பூமியை உள்ளடக்கிய பிரபஞ்சம் கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் தொகுப்பாகும். இந்த நட்சத்திரங்கள் தொடர்ந்து ஒரு வகை ஆற்றலை வெளியிட்டுக்கொண்டே இருக்கின்றன. பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் எதிர்காலம் பற்றி அறிய நட்சத்திரங்கள் அடிப்படையாக அமைந்துள்ளன.
 
பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனை ஆராய்வதன் மூலம் பிரபஞ்சத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய முடியும். பூமியில் சூரியனைப் போன்ற நட்சத்திரங்களை உருவாக்கி அவற்றின் நிலைமைகளை ஆராய்ச்சி செய்வது சாத்தியமற்றது.
 
எனவேதான் சூரியனை நேரடியாக ஆய்வு செய்ய விண்வெளி நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. ஆதித்யா எல்1 என்பது இஸ்ரோவின் சூரியனைப் பற்றி அறியும் சோதனையின் ஒரு பகுதியாகும்.
 
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும், ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் சூரியனைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள, ஏற்கனவே பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளன. இஸ்ரோவின் ஆதித்யா எல்1 திட்டம் சூரியனைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வது மட்டுமின்றி சூரியனை தொடர்ந்து கண்காணிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்.
 
சூரியனில் எழக்கூடிய சூரிய புயல்களை முன்கூட்டியே கண்டறிவதற்கும் இந்த முயற்சி பயனுள்ளதாக இருக்கும்.
 
சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்து அதுபற்றிய தகவல்களை இஸ்ரோவுக்கு ஆதித்யா எல்1 அனுப்பும்.
 
சூரிய புயல்களை ஏன் கண்காணிக்க வேண்டும்?
 
சூரிய குடும்பத்தின் ஆற்றல் மூலமாக சூரியன் விளங்கி வருகிறது. சூரியனின் வயது 450 கோடி ஆண்டுகள் இருக்கும். பூமியில் இருந்து சுமார் 15 கோடி கிலோமீட்டர் தொலைவில் சூரியன் உள்ளது. சூரியனில் தொடர்ச்சியான மைய இணைவு செயல்முறையால் ஹைட்ரஜன் ஹீலியமாக மாற்றப்படுகிறது. இந்த மாற்றத்தின் போது, ​​அதிக அளவு ஆற்றல் வெளியிடப்படுகிறது.
 
சூரியனின் மையப்பகுதி கோர் என்று அழைக்கப்படும் நிலையில், அதன் மேற்பரப்பு குரோமோஸ்ஃபியர் என அழைக்கப்படுகிறது. அங்கு வெப்பநிலை 15 லட்சம் டிகிரி செல்சியஸாக இருக்கும். மையத்திலிருந்து விலகி மேற்பரப்புக்குச் செல்லச் செல்ல அதன் வெப்பநிலை குறைகிறது.
 
சூரியனின் மேற்பரப்பில் வெப்பநிலை 5500 டிகிரி செல்சியஸ். இதிலிருந்து சூரியனைச் சுற்றியுள்ள பகுதி கொரோனா என்று அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது இப்பகுதியை வெறும் கண்ணால் பார்க்க முடியும்.
 
பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் சூரியன் உள்ளது.
 
பெரிய அளவிலான சூரியப் புயல்கள் சூரியனின் மேற்பரப்பில் இருந்து எல்லா திசைகளிலும் தொடர்ந்து உமிழப்படுகின்றன. சில சமயங்களில் சூரியனின் சில பகுதிகளில் தீவிர அணுக்கரு இணைவு நிகழ்வுகள் ஏற்பட்டு பெருமளவில் வெடிப்பு ஏற்பட்டு சூரியப் புயலாக உருவாகிறது.
 
இதுபோன்ற சூரியப் புயல்கள் பூமியைத் தாக்கினால், அதன் தாக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இருப்பினும் பூமியின் வளிமண்டலம் மற்றும் காந்தப்புலம் காரணமாக, இந்த சூரிய புயல்கள் நேரடியாக பூமியை அடைய முடியாது.
 
ஆனால் வானத்தில் உள்ள செயற்கைக்கோள்கள், தரையில் உள்ள தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் மின் கட்டமைப்புக்கள் ஆகியவற்றுக்கு ஆபத்து ஏற்படும். சர்வதேச விண்வெளி நிலையம் போன்றவற்றில் பணிபுரியும் விண்வெளி வீரர்கள், இது போன்ற சூரிய புயல்களால் நேரடியாக பாதிக்கப்பட்டால் பெரும் ஆபத்து ஏற்படும்.
 
எனவே, அவற்றை ஆரம்பத்திலேயே அடையாளம் காண்பது அவசியம். ஆதித்யா எல்1 என்ன செய்கிறது என்பதற்கான மூலம் இதுதான்.
 
சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்கு இதுபோன்ற விண்கலத்தை அனுப்பும் நான்காவது நாடு இந்தியா. இதுவரை, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிகள் சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்காக, சில நேரங்களில் தனித்தனியாகவும், சில சமயங்களில் கூட்டாகவும் விண்கலங்களை அனுப்பியுள்ளன. இப்போது ஆதித்யா எல்1-ஐ அனுப்புவதன் மூலம், அந்த திட்டங்களை இஸ்ரோ எதிர்கொள்ளப் போகிறது.
 
ஆதித்யா எல்1, சூரியனை ஆய்வு செய்வதற்கான ஒரு தனி முயற்சி. சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில், இரு கோள்களின் ஈர்ப்பு விசை சரிசமாக இருக்கும் லெக்ரேஞசியன் பாயின்ட் ஒன் (Lagrangian Point One)-ஐச் சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் இந்த விண்கலம் செலுத்தப்படும்.
 
ஆகஸ்ட் 26-ம் தேதி அனுப்பி வைக்கப்படும் விண்கலம், நான்கு மாத கால பயணத்திற்குப் பிறகு அதன் சுற்றுப்பாதையில் நுழைய உள்ளது. பின்னர் இந்த விண்கலம் சூரியனைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளும். சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியை இந்த விண்கலம் மேற்கொள்வதால் அதற்கு ஆதித்யா என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆதித்யா என்றால் சூரியன் என்று பொருள்.
 
சூரியன் மற்றும் பூமியின் மையப் பகுதியான 'லெக்ரேஞ்சியன் பாயின்ட் ஒன்'-ஐ மையமாகக் கொண்டு இந்த விண்கலம் ஏவப்பட உள்ளதால், இஸ்ரோ இந்த திட்டத்துக்கு ஆதித்யா எல்1 என்று பெயரிட்டுள்ளது.
 
சூரியன், கோள்கள், துணைக்கோள்கள், சிறுகோள்கள் என விண்வெளியில் ஏதேனும் இரண்டு விண் கோள்களுக்கு இடையே ஒரு பொருளை வைத்தால், எந்தக் கோளின் ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கிறதோ, அந்தக் கோளை நோக்கி அந்தப் பொருள் நகரும்.
 
ஆனால் அந்த இரண்டு கோள்களுக்கும் மையத்தில் இரண்டின் ஈர்ப்பு விசையும் பூஜ்ஜியமாக இருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. அவை லெக்ரேஞ்சியன் புள்ளிகள் (Lagrangian Points) என்று அழைக்கப்படுகின்றன. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே ஐந்து லெக்ரேஞ்சியன் புள்ளிகள் உள்ளன.
 
சூரியனையும் பூமியையும் இணைத்து ஒரு கோடு போட்டால், அந்த கோட்டில் பூமியின் பக்கம், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தில் பத்தில் ஒரு பங்கில் லெக்ரேஞ்சியன் புள்ளி 1 இருக்கும். அதற்குச் சமமாக பூமிக்குப் பின்னால் லெக்ரேஞ்ச் பாயிண்ட் 2 உள்ளது.
 
இதேபோல், சூரியனின் மறுபக்கம் லெக்ரேஞ்ச் புள்ளி 3 இருக்கிறது. ஜோசப் லூயி லெக்ரேஞ்சி என்ற பிரெஞ்சு வானியலாளர் இதைக் கண்டுபிடித்ததால் இந்த இடங்களுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
இந்த இரண்டையும் தவிர, இரண்டு கோள்களுக்கு வெளியே ஒரு சமபக்க முக்கோணத்தை வரைந்தால், அதன் இரண்டு முனைகளிலும் மேலும் இரண்டு லெக்ரேஞ்சியன் புள்ளிகள் இருக்கும். அவை L4 மற்றும் L5 என்று அழைக்கப்படுகின்றன.
 
இவற்றில், ஆதித்யா எல்1 பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள லெக்ரேஞ்ச் பாயின்ட் 1 க்கு அருகில் உள்ள வெற்றிட சுற்றுப்பாதையில் நுழையப் போகிறது.
 
இந்த லெக்ரேஞ்சியன் புள்ளிகள் வானியல் ஆராய்ச்சி மற்றும் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியில் இந்த புள்ளிகள் மிகவும் முக்கியமானவை.
 
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் அதாவது சூரியன், பூமி, சந்திரன், கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் அனைத்திலும் ஈர்ப்பு விசை உள்ளது. ஒரு கோளின் ஈர்ப்பு விசை அதன் நிறையைப் பொறுத்தது. இதன் பொருள் சூரியன் மற்றும் வியாழன் போன்ற பெரிய கோள்களின் ஈர்ப்பு விசை அதிகமாக உள்ளது என்பதே ஆகும்.
 
பூமி, வெள்ளி, புதன் மற்றும் சந்திரன் போன்ற சிறிய கோள்கள் அவற்றை விட குறைவான ஈர்ப்பு விசை கொண்டவை. சூரிய குடும்பத்தின் மொத்த நிறையில் 99.86 சதவீதம் சூரியனில் மட்டுமே உள்ளது. மற்ற அனைத்து கோள்களின் நிறை 0.14 சதவீதம் மட்டுமே.
 
சூரியன் பூமியை விட 3 லட்சத்து 33 ஆயிரம் மடங்கு பெரியது. அதாவது 13 இலட்சம் கோள்கள் சூரியனுக்குள் வரக்கூடியவை. சூரியன் மிகவும் பெரியது. சூரியனின் ஈர்ப்பு விசை, பூமியை விட 27.9 மடங்கு அதிகம்.
 
ஆனால் சந்திரன் பூமியை விட சிறியதாக இருப்பதால், அங்குள்ள ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே. பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி விண்வெளியை அடைய ஒரு ராக்கெட் 11.2 கிமீ/வி வேகத்தில் செல்ல வேண்டும். இதே போல் சூரியனின் ஈர்ப்பு விசையைத் தாண்டிச் செல்ல வினாடிக்கு 615 கிலோமீட்டர் வேகத்தில் மேலே செல்ல வேண்டும்.
 
எனவே இந்த இரண்டு ஈர்ப்பு விசைகளையும் சமநிலைப்படுத்தும் புள்ளியில் இருந்து சூரியனை ஆராய ஆதித்யா எல்1 போன்ற விண்கலங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
 
சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் வெப்பமாற்றங்கள், வெப்ப உமிழ்வுகள் ஆகியவை குறித்த தகவக்ளை இஸ்ரோ பெறமுடியும்.
 
ஐந்து லெக்ரேஞ்சியன் புள்ளிகள் இருக்கும் போது இஸ்ரோ ஏன் புள்ளி ஒன்றைத் தேர்வு செய்தது?
 
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ஐந்து லெக்ரேஞ்சியன் புள்ளிகள் உள்ளன. ஆனால் இஸ்ரோ ஆதித்யா L1 ஐ லெக்ரேஞ்ச் பாயின்ட் 1க்கு அருகில் அனுப்புகிறது. ஏனெனில் இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவில் பத்தில் ஒரு பங்காகும். அதாவது சுமார் ஒன்றரை கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
 
L2 புள்ளி பூமிக்கு பின்னால் இருப்பதால், அங்கிருந்து சூரியனை ஆராய்ச்சி செய்வது கடினமாக இருக்கும். L3 சூரியனுக்குப் பின்னால் இருப்பதால் அங்கு செல்வதும் மிகவும் கடினம்.
 
L4 மற்றும் L5 ஆகியவை தொலைவில் உள்ளன. எனவே இஸ்ரோ தனது விண்கலத்தை எல்1 புள்ளிக்கு அருகில் அனுப்புகிறது. மேலும் L1-ல் நிலையான ஈர்ப்பு விசை இருப்பதால் அது பூமியினாலோ, சூரியனாலோ ஈரத்துக்கொள்ளப்படும் நிலை ஏற்படாது. இதுமட்டுமின்றி சூரியனின் மேற்பரப்பை ஆராய இந்த L1 புள்ளி தான் மிகச் சிறந்த இடமாகக் கருதப்படுகிறது.
 
சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்காக பூமியில் பல சூரிய ஆய்வுக் கூடங்கள் உள்ளன. ஆனால் பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சூரியனின் முழு அளவையும் அவைகளால் ஆய்வு செய்ய இயலாது. குறிப்பாக சூரியனின் மேற்பரப்பை ஆய்வு செய்ய, பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டிச் செல்லவேண்டும்.
 
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் அமைந்துள்ள லெக்ரேஞ்சியன் பாயின்ட் 1-ற்கு அருகில் உள்ள ஆய்வுக் கலங்கள் ஒவ்வொரு கணமும் சூரியனை நேரடியாகப் பார்க்க முடியும். அவற்றிற்கும் சூரியனுக்கும் இடையில் எந்த தடுப்பும் இல்லை.
 
சூரியனில் இருந்து வரும் சூரியப் புயல்களை அவை முன்கூட்டியே கண்டறிய முடியும்.
 
சூரியனைப் பற்றி ஆராய ஏற்கெனவே அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய விண்வெளி ஏஜென்சிகள் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.
 
சூரியனின் மேற்பரப்பை ஆராய்வதற்காக ஆதித்யா எல்1ல் ஏழு வகையான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் நான்கு கருவிகள் தொடர்ந்து சூரியனை பார்த்துக்கொண்டே இருக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன.
 
மற்ற மூன்று கருவிகள் லெக்ரேஞ்சியன் புள்ளி 1 அருகே உள்ள நிலைமைகளை ஆய்வு செய்து அந்த தகவலை இஸ்ரோவுக்கு அனுப்பும். இந்த ஏழு கருவிகள் முக்கியமாக சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள், அங்கே இருந்து பெரிய அளவில் வெளிப்படும் நிறை (Mass) போன்ற பல விஷயங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கும். மேலும் சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் மூலக்கூறு மாற்றங்களையும் பகுப்பாய்வு செய்யும்.
 
சூரியனின் மேற்பரப்பை ஆராயும் போது, அங்கு வெப்பம் உருவாகும் வழிமுறை, அங்கிருந்து வெளியேறும் நிறை (Mass) - அதன் வேகம், சூரியனைச் சுற்றியுள்ள காந்தப்புலம், அவற்றின் இயக்கவியல் போன்ற பல்வேறு விஷயங்கள் கருத்திக்கொள்ளப்படும். இதற்காக, சக்திவாய்ந்த பல்வேறு கருவிகளும் ஆதித்யா எல் 1-ல் நிறுவப்பட்டுள்ளன.
 
இவை தவிர, ஆதித்யா சூரியப் புயலின் துகள் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் செய்து அவற்றின் முடிவுகளை இஸ்ரோவுக்கு அனுப்பும்.
 
ஆதித்யா எல்1-ல் சூரியனை தொடர்ந்து கண்காணிக்கும் வகையில் 4 உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
 
லெக்ரேஞ்சியன் புள்ளிகள் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் மட்டும் தான் உள்ளனவா?
இந்த லெக்ரேஞ்சியன் புள்ளிகள் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் மட்டும் இருப்பவை அல்ல. இந்த பிரபஞ்சத்தில் உள்ள எந்த இரண்டு கோள்களுக்கும் இடையில் ஈர்ப்பு விசை சமமாக உள்ள இடங்கள் லெக்ரேஞ்சியன் புள்ளி எனப்படும்.
 
சூரிய குடும்பத்தில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே ஐந்து லெக்ரேஞ்சியன் புள்ளிகள் இருப்பது போல, அனைத்து கோள்களுக்கும் சூரியனுக்கும் இடையிலும் இதே போன்ற லெக்ரேஞ்சியன் புள்ளிகள் இருக்கின்றன.
 
சூரியனுக்கும் வியாழனுக்கும் இடையில் L4 மற்றும் L5 புள்ளிகளில் பல சிறுகோள்கள் நிலையாக உள்ளன. 1906 ஆம் ஆண்டு இந்த இடத்தில் சிறுகோள்கள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. 2022 ஆம் ஆண்டில், இது போன்ற 12,000 க்கும் மேற்பட்ட சிறுகோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில், L4 புள்ளிக்கு அருகில் உள்ள சிறுகோள்கள் இலியட் சிறுகோள்கள் (Iliad asteroids) என்றும், L5க்கு அருகில் உள்ள சிறுகோள்கள் ட்ரோஜன் சிறுகோள்கள் (Trojan asteroids) என்றும் அழைக்கப்படுகின்றன.
 
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே L4 புள்ளிக்கு அருகில் இரண்டு ட்ரோஜன் சிறுகோள்களும் உள்ளன. அதேபோல், பூமிக்கும் நிலவுக்கும் இடையே உள்ள L1-க்கு அருகில் சீனா தனது ஷாங்கி விண்கலத்தை நிலைநிறுத்தி ஆய்வு செய்துவருகிறது.
 
அதேபோல், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் கயா தொலைநோக்கியும், ஐரோப்பிய - அமெரிக்க கூட்டுத் தயாரிப்பான ஜேம்ஸ் வெப் விண்கலமும் சூரியனின் L2 லெக்ரேஞ்ச் பாயின்ட் அருகே உள்ள பகுதிகளை ஆய்வு செய்துவருகின்றன.
 
இவை சூரியனின் L2 அதாவது பூமிக்கு பின்னால் இருப்பதால், இந்த தொலைநோக்கிகளை பூமி சூரியப் புயல் தாக்குவதிலிருந்து தடுக்கிறது. இவற்றின் மீது சூரியப் புயல் தாக்கம் இருக்காது என்பதால் அது பிரபஞ்சத்தை வெகுதொலைவுக்கு உற்றுநோக்கமுடியும்.
 
ஆனால் லெக்ரேஞ்சியப் புள்ளி 1,2,3 இல் அமைந்துள்ள செயற்கைக்கோள்கள் மற்றும் துணைக் கோள்கள் நிலையற்றவை. அதனால்தான் ஒவ்வொரு 21 நாட்களுக்கும் ஒரு முறை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எரிபொருளை உட்கொண்டு அதன் நிலையை மாற்றிக்கொள்கிறது.
 
 
சூரியனின் மேற்பரப்பில் வெப்பநிலை 5500 டிகிரி செல்சியஸ் ஆகும். அதாவது, அந்த நிலையில் எந்த உயிரும் வாழ முடியாது. ஆனால் சூரியனின் மேற்பரப்பில் உள்ள கரோனாவைக் கண்காணிக்க பல ஆய்வுக் கலங்கள் சூரியனுக்கு அருகில் பறந்தன.
 
நாசாவின் பார்க்கர் சூரிய ஆய்வுக் கலம் தான் இதுவரை சூரியனுக்கு மிக அருகில் ஆய்வு செய்யவிருக்கும் விண்கலமாகும். 2018 இல் இந்த விண்கலம் ஏவப்பட்டதிலிருந்து, ஜூன் 27, 2023 வரை சூரியனை 16 முறை வெற்றிகரமாகச் சுற்றியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
 
சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் பார்க்கர் ஆய்வுக் கலம், சூரியனின் ஈர்ப்பு விசைக்கு உள்ளாகாமல் ஒரு நிலையான நீண்ட வட்டப்பாதையில் நகர்வதற்கு வீனஸ் கோளின் ஈர்ப்பு விசைக்கு எதிராக சமநிலைப்படுத்துகிறது.
 
இருப்பினும், ஜூன் 22, 2023 அன்று, இது சூரியனுக்கு மிக அருகில் 5.3 மில்லியன் மைல் தொலைவில், மணிக்கு 3 லட்சத்து 64 ஆயிரத்து 610 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தது. பார்க்கர் ஆய்வுக் கலம் இதுவரை சூரியனின் கரோனா பற்றிய மதிப்புமிக்க தகவல்களை நாசாவுக்கு அளித்துள்ளது.
 
இஸ்ரோவின் ஆதித்யா எல்1 சூரியனைப் பற்றிய தகவல்களையும், சூரியப் புயல்களைப் பற்றிய தகவல்களையும் தொடர்ந்து கண்டறிந்து இஸ்ரோவுக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments