சிறுவர், சிறுமிகளுக்கு பாலியல் கல்வி வீடியோக்கள்
, திங்கள், 11 நவம்பர் 2013 (13:06 IST)
சீனாவில் சிறுவர், சிறுமிகளுக்கு பாலியல் கல்வியை கற்றுக் கொடுக்கும் வகையிலான மூன்று புதிய கார்ட்டூன் அனிமேஷன் வீடியோ வெளிடப்பட்டுள்ளன. இந்த வீடியோக்களை ஏற்கனவே 10,00,000 திற்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர்.
சீனாவில் சிறுவர், சிறுமிகள் அதிகளவு பாலியல் தொந்தரவுக்கு ஆளாவது சமீபகாலமாகவே அதிகரித்து வந்தது.இதனையடுத்து இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தனியார் நிறுவனம் ஒன்று முடிவு செய்தது.
இந்நிறுவனத்தின் சார்பில் கைகளால் வரையப்பட்டு அனிமேஷன் செய்யப்பட்ட மூன்று வீடியோ காட்சிகள் தயாரிக்கப்பட்டன.
குழந்தை எங்கிருந்து வருகிறது? ('where babies come from'), ஏன் சிறுவர்கள் சிறுமியரிடமிருந்து வித்தியாசப்படுகிறார்கள்? ('why boys are different from girls' ) மற்றும் எவ்வாறு சிறுவர்,சிறுமியர் பாலியல் கொடுமையை தவிர்க்கலாம்? ( 'how minors can prevent molestation') போன்ற தலைப்புகளில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த வீடியோக்களில் சிறுவர்- சிறுமியருக்கு பாலியல் கல்வியை கற்றுத் தரும் அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோவை வடிவமைத்தவர், இன்றைய சிறுவர்,சிறுமியர்களுக்கு இந்த வீடியோ காட்சிகள் மிக அவசியமானவை, பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு பாலியல் கல்வி பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.