எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் சிறந்த துறையாக காவல்துறை இருந்தது. இப்போது ஏவல் துறையாக உள்ளது.
திமுக அரசின் மக்கள் விரோத போக்கை தோலுரித்து காட்டுவதால் தான் எடப்பாடி பழனிச்சாமி மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது எனவும், இந்த போக்கு தொடர்ந்தால் மனித வெடிகுண்டாக மாறுவோம் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் கடந்த சனியன்று எடப்பாடி பழனிச்சாமி குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறு வீடியோ வெளியிட்ட அமமுக பிரமுகர் ராஜேஸ்வரனை தாக்கிய விவகாரத்தில், இ.பி.எஸ் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
பழங்காநத்தம் பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற வரும் ஆர்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
ஆர்பாட்டத்தில் போது பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,
"எடப்பாடி பழனிச்சாமி மீது பொய்வழக்கு பதியும் இது போன்ற சர்வாதிகார போக்கு தொடரும் என்றால் மதுரையில் அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்.
துணை முதலமைச்சராக இருந்த போது ஸ்டாலினால் மதுரைக்குள் நுழைய முடியவில்லை. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி எதிர்கட்சி தலைவராக தைரியமாக மதுரைக்கு வந்தார்.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் சிறந்த துறையாக காவல்துறை இருந்தது. ஆனால், இப்போது ஏவல் துறையாக உள்ளது.
திமுக அரசின் மக்கள் விரோத போக்கை தோலுரித்து காட்டும் தலைவராக உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அதனை பொறுக்க முடியாமலே வழக்கு பதியப்பட்டு உள்ளது.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற துப்பில்லாத அரசு. எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றிய திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் பொம்மை முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.
மதுரையில் துவங்கி இருக்கும் இந்த ஆர்பாட்டம் வெறும் டிரெயல் (Trail) தான். மதுரை தொண்டர்கள் ஜெயிலுக்கு போக பயந்தவர்கள் அல்ல. நாங்கள் பல ஜெயில்களை பார்த்தவர்கள். எங்களிடம் இது போன்று பூச்சாண்டி காட்டாதீர்கள். அதிமுக எதற்கும் அஞ்சாது
சர்வாதிகார ஹிட்லர் அரசை மக்கள் தூக்கி எறிவார்கள். ஸ்டாலின் வீட்டிற்கு செல்வார், எடப்பாடி பழனிச்சாமி கோட்டைக்கு செல்வார்" என்றார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில்,
"திமுக அரசு நாட்டை பற்றி கூட கவலைப்பட வேண்டாம். கமிஷனை மட்டும் வாங்கிக் கொண்டு ஆட்சி நடத்துங்கள். தேவையில்லாமல் வழக்கு பதிவு செய்து குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள்.
கருணாநிதியாலே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஸ்டாலினால் என்ன செய்து விட முடியும்?
கண்ணகி நீதி கேட்டதால், தவறு செய்த மன்னன் இறந்து போனான். எடப்பாடி பழனிச்சாமி மீது தவறான வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரி மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.