புதியதாகத் தொடங்கும் எந்தவொரு செயலும் வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு, மூல முதற் கடவுளான விநாயகரை வழிபடுவது நமது மக்களிடையே தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். நம்பியோரை கைவிடாத அந்தத் தும்பிக்கையானுக்கு உகந்த நாள் விநாயகர் சதுர்த்தி. ஆண்டு தோரும் ஆவணி மாதம் சுக்லபக்ஷ சதுர்த்தி திதியை (தினத்தை) விநாயகர் சதுர்த்தியாக வழிபடுகிறோம்.பிள்ளையார் சுழி போடுவது ஏன்?கணபதியை துதித்து ஒரு செயலத் தொடங்கினால் தொட்டது துலங்கும் என்பது ஐதீகம். இதையொட்டியே பிள்ளையார் சுழி போட்டு எழுதும் பழக்கம் நம்மிடம் உருவானது.
உலகில் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவரே விநாயகப் பெருமான்தான். வேத வியாசர் மகாபாரதத்தை சொல்லச்சொல்ல தன் தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி எழுதியவர் பிள்ளையார். அதற்காகவே நாமும் பிள்ளையார் சுழி போட்டு எழுதத் தொடங்குகிறோம்.
எலி வாகனத்தின் தத்துவம்
கனத்த உருவம் கொண்ட பிள்ளையார் சிறிய உருவம் உடைய மூஞ்சுறுவை, அதாவது எலியை வாகனமாகக் கொண்டிருப்பது முரண்பாடாகவும் வினோதமாகவும் இருக்கலாம். ஆனால் இதில் ஒரு தத்துவம் அடங்கியுள்ளது.
யானை முகமும், பெருத்த உடலும் கொண்ட விநாயகருக்கு சின்னஞ்சிரு மூஞ்சூறு வாகனமாக இருப்பது போல், நம் கண்ணுக்கு புலப்படாத மூச்சுக் காற்றானது 'வினை' எனப்படும் நம் உடலைத் தூக்கிச் செல்கிறது.
மேலும், சிறியதாக உள்ள எதையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்ற பாடத்தை நமக்கு உணர்த்தவே எலியை வாகனமாகக் கொண்டிருக்கிறார் கணபதி.
கணபதியை வணங்குவது எப்படி?
பிள்ளையார் முன் நின்று அவரைத் துதித்து, தலையில் குட்டிக் கொண்டு பக்தர்கள் வழிபடுவதை நாம் பார்த்திருக்கிறோம். முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடது பக்கத்திலும், இடது கையால் வலது பக்கத்திலும் 3 முறை குட்டி, காதுகளைப் பிடித்தபடி தோப்புக் கரணம் போட்டு விநாயகரை வணங்க வேண்டும்.
தோப்புக் கரணம் போடுவதற்கு ஒரு காரணமும் உண்டு. மகா விஷ்ணுவின் ஸ்ரீ சக்கரத்தை பிடுங்கிக் கொண்டு அதை வாயில் போட்டுக் கொண்டாராம் விநாயகர். பலம் பொருந்திய விநாயகரிடம் இருந்த சக்கரத்தை மீட்க என்னன்னவோ முயன்றும் திருமாலாலுக்கு வெற்றி கிட்டவில்லை.
இறுதியில் பிள்ளையார் முன் தோப்புக் கரணம் போட, அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார் யானைமுகன். எதிர்பார்த்தது போலவே வாயில் இருந்த சக்கரம் வெளியே வந்து விழுந்தது. மகா விஷ்ணு சக்கரத்தை எடுத்துக் கொண்டார்.
இதைப்போலவே நாமும் தோப்புக் கரணம் போட்டு வழிபட்டால் வேண்டிய வளங்களை விநாயகர் தருவார் என்பது நம்பிக்கை.
அருகம்புல் வைப்பது ஏன்?
விநாயகர் வழிபாட்டில் அருகம்புல்லுக்கு தனி இடம் உண்டு. இதற்கும் ஒரு காரணம் உள்ளது. ஒருமுறை அனலாசுரன் என்ற அசுரனை விநாயகர் விழுங்கினார். வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன், பெயருக்கேற்ப அனலைக் கக்கினான். அந்த சூட்டைத் தணிக்க அருகம்புல்லை விழுங்கினார் விநாயகர்.
உடலுக்கு குளிச்சி தருவது அருகம்புல், இதன் மூலம் விநாயகர் வழிபாட்டில் முக்கிய இடத்தைப் பெற்றது. பூ கிடைக்காதவர்கள் கூட அருகம்புல் வைத்து பிள்ளையாரை வழிபடலாம்.
நைவேத்தியங்கள்!
விநாயகச் சதுர்த்தியின்போது பிள்ளையாருக்கு வெண் பொங்கல், வெல்ல மோதகம், உப்பு மோதகம், அப்பம், உளுந்து வடை போன்றவற்றை நைவேத்தியமிட்டு வழிபடலாம். கொய்யா, வாழைப்பழம், திராட்சை, நாவல் பழம் போன்றவற்றுடன் கரும்புத் துண்டு, தேங்காய், வெற்றிலைப் பாக்கு வைத்தும் படையல் இடலாம்.
வீட்டில் களிமண் பிள்ளையார் வைத்திருப்பவர்கள், அதற்குரிய பூஜைகள் செய்து வழிபட்ட பின், ஓடும் நீரில் அதனை விட்டுவிடவேண்டும். அல்லது கிணறு, ஏரி, கடல் போன்றவற்றில் விநாயகர் சிலையை கரைத்து விடலாம்.
காரிய சித்திக்கு துணை நிற்கும் விநாயகரை வேண்டி சதுர்த்தி தினத்தன்று விரதம் இருக்கலாம். எல்லா விரதங்களையும் விட மேலானது விநாயகர் சதுர்த்தி விரதம் ஆகும். அதனை மேற்கொண்டு எல்லா வளமும் நலமும் பெருவோமாக.