வங்கக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால், தமிழ்நாட்டில் எதிர்பார்த்ததை விட அதிக மழை பெய்யும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, தமிழ்நாடு மற்றும் இலங்கை இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக கடலோரப் பகுதியில் மட்டும் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது, காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனால் சென்னையில் நாளையும் நாளை மறுநாளும் கன மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
நவம்பர் 17 கன மழை எச்சரிக்கையை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடிதம் எழுதியுள்ளதாகவும், அந்த கடிதத்தில் கன மழை சூழ்நிலையை சரியான முறையில் கையாள துறைகளையும் தயார் படுத்த வேண்டும் என்று கூறியுள்ளதாகவும், அனைத்து துறைகளுடன் இணைந்து தேவையான ஆயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.