Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்கள் கலைஞர் அல்ல நடிகர் மட்டும்தான் –சிவக்குமாரை சாடிய எழுத்தாளர் சாரு நிவேதிதா

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (13:59 IST)
செல்ஃபி விவகாரத்தில் ஆவேசப்பட்டு போனைத் தட்டிவிட்டு நேற்று முழுவதும் சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கப்பட்ட நடிகர் சிவக்குமார் இன்று அதற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிவக்குமார் விவகாரத்தில் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துவரும் வேளையில் எழுத்தாளர் சாரு நிவேதிதா தனது முகநூல் பக்கத்தில் இதுகுறித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

அதில் ‘நடிகர் சிவகுமார் ஒரு மனிதரின் செல்போனை மிகக் கோபத்துடனும் ஆவேசத்துடனும் தட்டி விட்ட செயலுக்கு I am sorry என்று சொன்ன விடியோ பதிவைப் பார்த்தேன். இது பற்றியும் கொஞ்சம் சொல்ல இருக்கிறது. என் நண்பர்களிடம் அடிக்கடி நான் சொல்லும் விஷயம் இது. மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒரு தப்பு செய்தால் அதை சரி செய்கிறேன் பேர்வழி என்று தப்புக்கு மேல் தப்பு செய்கிறார்கள். அதையேதான் சிவகுமாரும் செய்திருக்கிறார்.
அதாவது ஒரு “கலைஞனாக” அவர் செய்தது தப்பே இல்லையாம். கலைஞர்கள் மீது ரசிகர்கள் அப்படித்தான் அத்துமீறுவார்களாம். அதைப் பெரிய மனது பண்ணி கலைஞர்கள்தான் பொறுத்துக் கொள்ள வேண்டுமாம். பெருவாரியான மக்கள் நான் செய்தது தவறு என்று நினைப்பதால், I am sorry என்கிறார் சிவகுமார்.


முதலில் உங்களை கலைஞர் என்று யார் சொன்னது? நீங்கள் ஒரு நடிகர். அவ்வளவுதான். தமிழில் நூற்றுக் கணக்கான நடிகர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எங்கே இப்போது? தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான எம்கேடி பாகவதர் பெயர் இன்று யாருக்குத் தெரியும் சொல்லுங்கள்? பி.யு. சின்னப்பா ஒரு நடிப்பு மேதை. அவர் பெயர் யாருக்கு ஞாபகம் இருக்கிறது? ஆனால் தமிழில் இதுவரை ஒரே ஒரு வரி கவிதையை எழுதியவனின் பெயர் கூட இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது. நடிகர்கள் மக்களுக்குக் கேளிக்கையை அளிப்பவர்கள். திருவள்ளுவனின் காலத்திலும் நிறைய நடிகர்கள் இருந்தார்கள். பாணர்கள் இருந்தார்கள். அவர்கள் பெயரெல்லாம் அழிந்து விட்டன. வள்ளுவனும் ஔவயும் நின்று விட்டார்கள்.

சிவகுமார் அவர்களே, உங்களிடமிருந்து ரொம்ப தூரத்திலிருந்துதான் அந்த இளைஞர் செல்ஃபி எடுத்தார். அதனால் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனாலும் மிக ஆவேசத்துடன் அந்த போனைத் தட்டி எறிந்தீர்கள். அந்த நபரை நீங்கள் அடித்தது போல் தான் இருந்தது அந்தக் காரியம். தமிழ் மக்கள் உங்களுக்குக் கொடுத்த ஆரவாரமான, உங்கள் தகுதிக்கு மீறிய இடத்தினால் வந்தது அந்தத் திமிர். அவரை நீங்கள் ரசிகர் என்று குறிப்பிடுகிறீர்கள். இல்லை சிவகுமார், அவர் உங்கள் ரசிகர் இல்லை. உங்கள் புதல்வர்களான சூர்யா, கார்த்திக்கு ரசிகர்கள் உண்டு. உங்களுக்கு இல்லை. ஆனாலும் அவர் ஏன் செல்ஃபி எடுத்தார் என்றால், பயில்வான் ரங்கநாதன் என்று ஒரு நடிகர் இருக்கிறார், உங்களுக்குத் தெரியுமா? அவர் வந்தால் கூட தமிழன் செல்ஃபி எடுத்துக் கொள்வான். அதுதான் தமிழனின் ரத்தம். சினிமா நடிகர்களை கடவுளாகக் கும்பிடும் தேசம் இது. அதுதான் இந்தத் திமிரை உங்களுக்கு அளிக்கிறது.

இப்போது சமூக வலைத்தளம் மூலம் உங்கள் திமிரான செயல் வெளிச்சத்துக்கு வந்து விட்டதால் வெறுமனே ஸாரி என்கிறீர்கள். இப்போது கூட நான் செய்தது தவறு என்று நீங்கள் சொல்லவில்லை. நான் கலைஞன். கலைஞர்களைப் பார்த்து ரசிகர்கள் உணர்ச்சி வசப்படத்தான் செய்வார்கள். அதை ஒரு கலைஞனாகிய நான் தான் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று படு திமிராகப் பேசுகிறீர்கள். அவர் அப்படி உணர்ச்சிவசப்பட்டு என்ன செய்தார்? அங்கே உணர்ச்சிவசப்பட்டு, ஆவேசம் அடைந்தது நீங்கள்தானே தவிர அந்த இளைஞர் அல்ல.

சிவகுமார், உலகில் உள்ள ஒரு எழுத்தாளன் இப்படிப்பட்ட திமிர்த்தனமான செயலைச் செய்ய மாட்டான். அது அவனுடைய wisdom. உங்களையெல்லாம் சினிமாவை மதமாகக் கொண்டாடும் தமிழர்கள் ஐவரி டவரில் உட்கார வைத்திருப்பதால் தலைகால் புரியாமல் ஆடுகிறீர்கள். கொஞ்சம் திரும்பிப் பாருங்கள், எம்கேடியும் பியு சின்னப்பாவும் இருக்கும் இடத்தை.’  எனத் தெரிவித்துள்ளார்

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் என் மேல் ‘அதற்காக’ அதிருப்தியில் இருக்கலாம்.. வெங்கட்பிரபு பகிர்ந்த தகவல்!

வெற்றிமாறன் எனும் மாஸ்டர் பில்ம்மேக்கர்… ‘விடுதலை 2’ படத்தைப் பாராட்டிய தனுஷ்!

சூர்யா 4 படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு எப்போது?... அறிவித்த கார்த்திக் சுப்பராஜ்!

பாலிவுட் போனது மொத்த கெட்டப்பும் சேஞ்ச் போல… கீர்த்தி சுரேஷின் புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments