இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் படம் நாளை தொடங்க உள்ளது.
மாநாடு வெற்றிக்குப் பிறகு வெங்கட்பிரபு இப்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ளார். இதையடுத்து அவர் இயக்கிய அடல்ட் காமெடி படமான மன்மத லீலை ஏப்ரல் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கவனிக்கப்பட்டது. அதையடுத்து நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தை அவர் இயக்க உள்ளார். இந்த படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் படத்துக்கு ஒளிப்பதிவாளராக SR கதிர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்காக இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் முன்னர் வெளியானது. இதையடுத்து தற்போது இளையராஜா இசையில் நேற்று ஒரு பாடலை வெங்கட்பிரபு பதிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இளையராஜாவோடு இருக்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு நாளை காலை 9 மணிக்கு மிகப்பெரிய அறிவிப்பு வருகிறது என அறிவித்து ரசிகர்களை ஆர்வமாக்கியுள்ளார்.