சட்ட மேதை அம்பேத்கர் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் சிலர் அம்பேத்கர் நினைவு நாளில் தங்களது சமூக வலைதளங்களில் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். அந்த வகையில் இயக்குனர் பா.ரஞ்சித், உலக நாயகன் கமல்ஹாசன் பதிவு செய்த கருத்துக்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
பா ரஞ்சித்: பாபாசாகேப் அவர்களை நோக்கி வீசப்பட்ட வெறுப்பையும், புறக்கணிப்பையும், வன்மத்தையும் புறம்தள்ளி எவராலும் எக்காலத்திலும் வீழ்த்த முடியாத நம் மக்களின் அடிப்படை உரிமையைப் பெற, தன் வாழ்நாளின் கடைசி நொடி வரை தன்னிடம் இருந்த ஒட்டுமொத்த ஆற்றலையும் கொண்டு சமரசமின்றி களம் கண்டு வெற்றி பெற்றதை என்றும் நினைவில் ஏந்துவோம்! முன்னெப்போதும் இல்லாத வகையில் சமீபகாலங்களில் தொடுக்கப்படும் வன்மங்களையும், அவதூறுகளையும், பிரிவினைவாத போக்கையும் தீவிரமாக எதிர்கொள்ள, பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் கொள்கைகளை ஏந்தி சமரசமின்றி களம் காண அவரின் நினைவு நாளில் உறுதி ஏற்போம்! ஜெய்பீம்
கமல்ஹாசன்: சட்டம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் தனக்கிருந்த பேரறிவை, சமூகச் சீர்திருத்தத்துக்கும் அனைத்து மக்களின் நலனுக்குமாகப் பயன்படுத்திய மாமனிதர் அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று.
ஆதிக்க சக்திகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்வதற்காக அவர் வழங்கிய அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிப்போம். அண்ணலின் நினைவை நெஞ்சில் சுமப்போம்.