சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களையும் ஒருசில கலவையான விமர்சனங்களையும் பெற்றது. இந்த படத்தை இயக்கியது ரஞ்சித் என்பதால் பெரும்பாலான பிரமுகர்கள் இந்த படத்தை கடுமையாக விமர்சிப்பதை தவிர்த்ததாக கூறப்படுகிறது.
மேலும் 'காலா' திரைப்படம் ஒருபக்கம் தமிழகத்தில் ரூ.50 கோடி வசூல் செய்து சாதனை செய்ததாக கூறப்பட்டாலும், ஐந்தாவது நாளே காற்று வாங்குவதாகவும், எனவே பணத்தை திருப்பி விநியோகிஸ்தர்கள் கேட்பதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு இந்த படம் குறித்து மாறுபட்ட செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் 'காலா' படத்தை நேற்று பார்த்த குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி தனது டுவிட்டரில் பாராட்டியுள்ளார். இந்த படத்தை பார்க்கும்போது நானும் ஒரு 'காலா' தான் என்று தனக்கு தோன்றியதாகவும், 'கபாலி'க்கு பின்னர் மீண்டும் ஒரு நல்ல படத்தை இயக்கிய ரஞ்சித்தை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக என இரண்டு தேசிய கட்சிகளை வட்கம் என்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோற்கடித்தவர் ஜிக்னேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 37 வயதான இவர் தொடர்ந்து குஜராத்தில் உள்ள ஒடுக்கப்பட்டோர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது