விவகாரத்து விஷயத்தில் தனிப்பட்ட உரையாடலை நான் எதிர்பார்க்கிறேன் என்றும் ஆனால் இன்று வரை அது மறுக்கப்படுகிறது என்றும் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அண்மையில் அறிவித்தது திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. விவாகரத்துக்கு ஆர்த்தியும், அவரது குடும்பமே காரணம் என சமூக வலைதளங்களில் வசைப்பாடி வருகின்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆர்த்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றி எழுந்துள்ள பொதுக் கருத்துகளை வைத்து பார்க்கும்போது, எனது மௌனம் பலவீனமோ அல்லது குற்ற உணர்வின் அடையாளமோ அல்ல என்பதை வலியுறுத்த வேண்டியது முக்கியமாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்
நான் கண்ணியமாக இருக்கவும், உண்மையை மறைப்பதற்கு என்னை மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு பதிலளிக்காமல் இருக்கவும் விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் சட்ட அமைப்பு நீதியை நிலைநாட்டும் என்று உறுதியாக நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், எனது முந்தைய அறிக்கை பரஸ்பர ஒப்புதல் இல்லாமல் விவாகரத்து குறித்து பொதுவெளியில் வெளியிடப்பட்டதாக கூறினேன் என்று அவர் சுட்டிக் காட்டினார். எனது ஒப்புதல் இல்லாமல் இது பொதுவெளியில் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றுதான் கூறினேன் என்றும் விவாகரத்து குறித்து எனக்கு தெரியாது என கூறவில்லை என்றும் ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
எனது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் தனிப்பட்ட உரையாடலை நான் எதிர்பார்க்கிறேன் என்றும் ஆனால் இன்று வரை அது மறுக்கப்படுகிறது என்றும் வேதனை தெரிவித்துள்ளார். நான் திருமணத்தின் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன் என்றும் யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் பொது விவாதங்களில் நான் ஈடுபட மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனது கவனம் எங்கள் குடும்பத்தின் நல்வாழ்வில் மட்டுமே உள்ளது. மேலும் வழிகாட்டுதலுக்கான கடவுளின் கிருபையை நான் நம்புகிறேன் என ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார்.