சாதனை படைத்து வரும் கால்பந்து வீரர் மெஸ்சி
, புதன், 9 ஜனவரி 2013 (12:33 IST)
உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை அர்ஜென்டினா வீரர் மெஸ்சி தொடர்ந்து 4வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார்.சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) ஆண்டுதோறும் உலகின் சிறந்த வீரரை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இதன்படி 2012ஆம் ஆண்டில் கால்பந்தில் அசத்திய சிறந்த வீரருக்கு விருது வழங்கும் விழா சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடந்தது.விருதுக்கான இறுதி களத்தில் அர்ஜென்டினா கேப்டன் லயனல் மெஸ்சி, போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியனோ ரொனால்டோ, ஸ்பெயின் முன்னணி வீரர் ஆண்ட்ரஸ் இனியஸ்டா ஆகியோர் போட்டியிட்டனர். 3 பேரில் தலைச்சிறந்த வீரரை தேர்வு செய்ய கால்பந்து அணிகளின் பயிற்சியாளர்கள், கேப்டன்கள், பத்திரிகையாளர்கள் வாக்களித்தனர்.இதன் முடிவில் 41.60 சதவீதம் வாக்கு பெற்ற லயனல் மெஸ்சி, இந்த ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான தங்கப்பந்து விருதை தட்டிச்சென்றார். 2வது இடம் பிடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 23.68 சதவீதமும், இனியஸ்டாவுக்கு 10.91 சதவீதமும் வாக்குகள் கிடைத்தன.மெஸ்சி அர்ஜென்டினா அணிக்கு மட்டுமின்றி, ஸ்பெயினில் புகழ்பெற்ற பார்சிலோனா கிளப்புக்காகவும் விளையாடி வருகிறார். கிளப் மற்றும் சர்வதேச போட்டிகளை சேர்த்து 2012ஆம் ஆண்டில் மட்டும் அவர் 91 கோல்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஓர் ஆண்டில் அதிக கோல்கள் அடித்தவரான ஜெர்மனியின் ஜெர்ஹார்டு முல்லரின் (85) 40 ஆண்டு கால சாதனையையும் சமீபத்தில் முறியடித்தார்.களத்தில் இறங்கி விட்டால், மின்னல் வேகத்தில் பந்தை கடத்தி சென்று லாவகமாக கோல் போடுவதில் மெஸ்சி கில்லாடி. இதனால் தான் அவர் இந்த முறையும் ‘பிபா’வின் நாயகனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.25
வயதான மெஸ்சி, இந்த விருதை பெறுவது இது 4வது முறையாகும். அதிலும் நான்கு முறையும் (2009, 2010, 2011, 2012) தொடர்ச்சியாக பெற்றிருப்பது இன்னொரு விசேஷமாகும். இதன் மூலம் இந்த விருதை அதிக முறை வென்றவர் என்ற சிறப்புக்கும் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். இதற்கு முன்பு அதிகபட்சமாக பிரான்சின் ஜிடேன், பிரேசிலின் ரொனால்டோ ஆகியோர் தலா 3 முறை இந்த விருதை பெற்றிருந்தனர். அவர்களை கடந்து மெஸ்சி புதிய சாதனை படைத்திருக்கிறார்.இது குறித்து மெஸ்சி கூறுகையில், ''உண்மையை சொல்ல வேண்டும் என்றால், தொடர்ந்து 4வது முறையாக இந்த விருதை பெற்றதை என்னால் நம்ப முடியவில்லை. கொஞ்சம் பதற்றத்துடன் உணர்ச்சிபூர்வமான நிலையில் உள்ளேன். எனது கிளப் (பார்சிலோனா) வீரர்களுடன் குறிப்பாக இங்குள்ள இனியஸ்டாவுடன் இந்த விருதை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். கிளப் போட்டியில் இனியஸ்டாவுடன் ஒவ்வொரு நாளும் பயிற்சியில் ஈடுபடுவது பெருமைக்குரிய விஷயமாகும்'' என்றார்.2012
ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீராங்கனையாக 32 வயதான அமெரிக்காவின் அப்பி வாம்பேச் (20.67 சதவீத வாக்குகள்) தேர்வு செய்யப்பட்டார். லண்டன் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்க பெண்கள் கால்பந்து அணியில் வாம்பேச்சும் இடம் பெற்றிருந்தார்.அமெரிக்க வீராங்கனை ஒருவர் இந்த விருதை பெறுவது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். 5 முறை இந்த விருதை பெற்ற சாதனையாளரான பிரேசிலின் மார்தா 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார். அவருக்கு ஓட்டெடுப்பில் 13.50 சதவீத ஆதரவே கிடைத்தது.