அடிலெய்ட்டில் நடந்து வரும் ஆஸ்ட்ரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 729 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடி தென் ஆப்பிரிக்கா அணி 77 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
முதல் இன்னிங்சில் ஆஸ்ட்ரேலியா அணி 550 ரன் குவித்தது. அந்த அணி கேப்டன் கிளார்க் (230) இரட்டை சதம் அடித்தார். வார்னர் (119), மைக்கேல் ஹஸ்ஸி (103) ஆகியோர் சதம் அடித்தனர்.
இதைத் தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 388 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. அந்த அணி கேப்டன் ஸ்மித் 122 ரன் குவித்தார்.
162 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்ட்ரேலியா அணி 2வது இன்னிங்சில் திணறியது. தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சில் தாக்குபிடிக்க முடியாமல் ஆஸ்ட்ரேலியா அணி 267 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தவிர்த்தபோது கேப்டன் கிளார்க் டிக்ளேர் செய்தார்.
இதையடுத்து 429 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களம் இறங்கியது. அணி கேப்டன் ஸ்மித் டக் அவுட் ஆனார். பின்னர் வந்த ஆம்லா 17 ரன்னிலும், ரூடுல்யா 3 ரன்னிலும், பீட்டர்சன் 24 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
4வது நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 77 ரன் எடுத்துள்ளது. டி வில்லியர்ஸ் 12 ரன்னிலும், பிளிசிஸ் 19 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
நாளை கடைசி நாள் என்பதால் தென் ஆப்பிரிக்கா அணி ஆட்டத்தை டிரா செய்ய முயற்சிக்கும். ஆனால் ஆஸ்ட்ரேலியா அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைபுடன் விளையாடும். இதனால் நாளைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.