டென்மார்க் ஓபன் சீரிஸ் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், இன்று உள்ளூர் வீராங்கனை டினே பானை எதிர்கொள்கிறார்.
தர நிலையில் 4வது இடத்தில் உள்ள சாய்னா நேவால், தர நிலையில் 6வது இடத்தில் உள்ள டென்மார்க் வீராங்கனை டினே பானுடன் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளார்.
இதில் 4 போட்டிகளில் சாய்னா வெற்றி பெற்றுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த லண்டன் ஒலிம்பிக் காலிறுதி ஆட்டத்தில் சாய்னா வெற்றி பெற்று, டினே பானை ஒலிம்பிக்கிலிருந்து வெளியேற்றினார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற டென்மார்க் ஓபன் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இருவருமே காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறிய நிலையில் இருவரும் இன்று காலிறுதியில் பலப்பரிட்சை நடத்துகின்றனர்.
சொந்த மண்ணில் நடைபெறும் இந்தப் போட்டியில் டினே பான் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடதக்கது.
நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில், ஜப்பான் வீராங்கனை மினாட்சு மிதானியை 21-14, 21-14 என்ற நேர்செட்களில் வீழ்த்தி சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேறினார்.