விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் ஆடவர் ஒற்றையர் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நேற்று 3ஆம் நாள் நடைபெற்றது. இதில் ரஃபேல் நடால், ஆன்டி ரோடிக், ஆண்டு முர்ரே ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
முன்னணி வீரரர்கள் பெரிய அளவில் சவால்களை எதிர்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஃபேல் நடால் 6- 3, 6- 2, 6- 4 என்ற செட் கணக்கில் தரநிலை வழங்கப்படாத அமெரிக்க வீரர் ரயான் ஸ்வீட்டிங் என்பவரை வீழ்த்தினார்.
ருமேனிய வீரர் விக்டர் ஹானெஸ்கியூவை அமெரிக்க வீரர் ஆண்டி ரோடிக் 6- 4, 6- 3, 6- 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஜெர்மனி வீரர் டோபியஸ் காம்கேயைச் சந்தித்த ஆண்டி மூரே 6- 3, 6- , 7- 5 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.
அதேபோல் 10ஆம் தரநிலையில் உள்ள அமெரிக்கரான மார்டி ஃபிஷ் 7- 6, 6- 4, 6- 4 என்ற நேர் செட்களில் உஸ்பெக் வீரர் இஸ்டோமினை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
6ஆம் தரநிலையில் உள்ள டொமாஸ் பெர்டிச் எளிதில் பிரான்ஸ் வீரர் பென்னெட்டூவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
தரநிலையில் இல்லாத வீரர்களில் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன், அமெரிக்காவின் அலெக்ஸ் போகமோலவ் ஜூனியர், குரேஷியாவின் இவான் லூபிசிச், போலந்தின் லூகச் குபாட், பல்கேரியாவின் டிமிட்ரோவ். ஹாலந்தின் ராபின் ஹாஸ், ஸ்பெயினின் ஃபெலிசியானோ லோபஸ், ரஷ்யாவின் டிமிட்ரி டுர்சுனோவ் ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
அதே போல் தரநிலை உள்ள வீரர்களில் கயேல் மான்ஃபீஸ், ரிச்சர்ட் காஸ்கே, கைல்ஸ் சிமோன் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.