டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2010-ம் ஆண்டின் சிறந்த 10 விளையாட்டு நிகழ்வுகள் பட்டியலில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் 200 ரன்கள் குவித்தது இடம்பெற்றுள்ளது.
லண்டனிலிருந்து வெளியாகும் உலகின் முன்னணி பத்திரிகையான டைம்ஸ், இந்த ஆண்டின் மிகச் சிறந்த முதல் 10 விளையாட்டு நிகழ்வுகளைப் பட்டியலிட்டுள்ளது. அதில்,
"விளையாட்டில் சில சாதனைகள் எளிதில் முறியடிக்க முடியாததாக இருக்கும். அந்த வகையில் கிரிக்கெட்டில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் 200 ரன்களைக் குவித்ததும் ஒரு மகத்தான சாதனையாகும்.
கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கும் சச்சின், குவாலியரில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை சதத்தை எட்டிய விதம் பரவசமூட்டுவதாக இருந்தது.
அந்த ஆட்டத்தில் "லிட்டில் மாஸ்டர்' சச்சின் 199 ரன்கள் அடித்திருந்தபோது, மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் உற்சாகக் கூச்சலிட்டும், இந்திய தேசியக் கொடியை ஏந்தியும் உச்சக்கட்ட பரவசத்தில் இருந்தனர். அவர் மேலும் 1 ரன் எடுத்து 200 ரன்களைத் தொட்டத்தருணம், உலக கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் என்றும் அழியாது நிலைபெற்றுவிட்டது'' என்று டைம்ஸ் பத்திரிகை புகழ்ந்துள்ளது.