பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய ஹாக்கி பயிற்சியாளர் கவுசிக் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி காவல்துறைக்கு ஹாக்கி இந்தியா அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் எம்.கே.கவுசிக் மீது ரஞ்சிதா தேவி என்ற வீராங்கனை கொடுத்த பாலியல் புகாரையடுத்து கவுசிக், அணியின் வீடியோ கிராபர் பசவராஜ் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்தனர். வீராங்கனை ரஞ்சிதா தேவியின் புகாரின் பேரில் ராஜீவ்மேத்தா தலைமையிலான 5 பேர் கமிட்டி விசாரணை நடத்தி தனது அறிக்கையை ஹாக்கி இந்தியா அமைப்பிடம் சமர்ப்பித்தது.
இதையடுத்து கவுசிக் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி காவல்துறைக்கு ஹாக்கி இந்தியா பொதுச்செயலர் நரிந்தர் பாத்ரா பரிந்துரை செய்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாத்ரா, இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் விசாரணை கமிட்டிக்கு கிடையாது என்று நாங்கள் கருதுகிறோம். வேலை பார்க்கும் இடத்தில் பெண்கள் செக்ஸ் கொடுமைக்குள்ளாவது சம்பந்தமாக விசாகா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும், கமிட்டியின் பரிந்துரை அடிப்படையிலும் இந்த விவகாரம் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 354-ன் கீழ்(பெண்ணை மானபங்கம் செய்தல்) வருகிறது.
எனவே தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி டெல்லி காவல்துறை ஆணையரை கேட்டு மனு கொடுத்திருக்கிறோம். மத்திய அரசோ அல்லது காவல்துறையினரோ எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
போதிய அவகாசம் இல்லாததால் விசாரணை கமிட்டி அறிக்கையில் எந்த பரிந்துரையும் செய்யப்படவில்லை. எனவே இந்த விவகாரத்தில் இந்திய விளையாட்டு ஆணையம் தக்கநடவடிக்கை எடுக்க நாங்கள் பரிந்துரை செய்திருக்கிறோம். மேலும் இது தொடர்பான நகல்கள் இந்திய ஒலிம்பிக் சங்கம், விளையாட்டு அமைச்சகம், ரெயில்வேதுறை, டெல்லி காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட ரஞ்சிதா, கவுசிக், பசவராஜ் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ரஞ்சிதாவின் புகாரை நாங்கள் மிகவும் சீரியசாக எடுத்துக்கொண்டுள்ளோம். அவரது எழுத்துப்பூர்வமான புகாரில் சில குற்றச்சாற்றுகளை சொல்லி இருக்கிறார். இவை நம்பத்தகுந்தவை. எனவே டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும். அரசாங்கமும் தானாக முன்வந்து இந்த பிரச்சனை குறித்து விசாரிக்க வேண்டும்.
இந்திய விளையாட்டில் இனி எப்போதும் இது போன்ற சம்பவங்கள் நிகழாதபடி முன்னுதாரணமாக இந்த வழக்கின் நடவடிக்கை இருக்க வேண்டும். புகாருக்குள்ளான கவுசிக், பசவராஜ் ஆகியோரின் சேவை எதிர்காலத்தில் அணிக்கு பயன்படுத்தப்படமாட்டாது என்று நரிந்தர் பாத்ரா கூறினார்.