விம்பிள்டன் டென்னிசில் 5 முறை சாம்பியனான அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், பல்கேரிய நாட்டு வீராங்கனை ஸ்வெடனா பைரோன்கோவாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
லண்டனில் நடந்து வரும் விம்விள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன. 5 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான 2ம் நிலை வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், பல்கேரிய நாட்டு வீராங்கனை ஸ்வெடனா பைரோன்கோவாவை எதிர்கொண்டார்.
இதில், அனுபவசாலியான வீனசை 22 வயதான பைரோன்கோவை திணறடித்தார். மேலும் தானாக செய்யும் தவறுகளை வீனஸ் 29 முறை செய்ததால் அவரால் சரிவில் இருந்து மீளவே முடியவில்லை.
முடிவில் 6-2, 6-3 என்ற நேர் செட்டில் பைரோன்கோவா வெற்றி பெற்று வீனசுக்கு அதிர்ச்சி அளித்தார். தரவரிசையில் 82வது இடம் வகிக்கும் பைரோன்கோவா கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 2வது சுற்றையே இதற்கு முன்பு தாண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு காலிறுதியில் 8ஆம் நிலை வீராங்கனை பெல்ஜியத்தின் கிம் கிலிஸ்டர்சும் மண்ணை கவ்வினார். அவரை 21ஆம் நிலை வீராங்கனை ரஷ்யாவின் வீரா ஸ்வோனரிவா 3-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார்.
கிலிஸ்டர்சுக்கு எதிராக 6வது முறையாக மோதியுள்ள ஸ்வோனரிவா, அதில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். ஸ்வோனரிவா அரையிறுதியில் பைரோன்கோவாவை எதிர்கொள்கிறார்.
இன்னொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 7-5, 6-3 என்ற நேர் செட்டில் சீனாவின் நா லீயை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.