ரோமில் நடைபெறும் இத்தாலி ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் தொடர் காலிறுதிச் சுற்றுக்கு ரஷ்யாவின் தினாரா சஃபீனா, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் போலந்தின் ராத்வான்ஸ்கா, ரஷ்யாவின் குஸ்னெட்சோவா, ஜெலெனா ஜான்கோவிச், ஈஸ்டோனியாவின் கனேபி, பெலாரஸ் வீராங்கனை அஸரென்கா, சான்சேஸ் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
தினாரா சஃபீனா தனது 3-வது சுற்று ஆட்டத்தில் சீன வீராங்கனை ஸெங் ஜீ என்பவரை வெல்ல கடுமையான சவால்களை சந்தித்தார். 5- 7, 6- 1, 7- 6 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார் சஃபீனா. இவர் காலிறுதிச் சுற்றில் ஸ்பெயின் வீராங்கனை சான்சேஸை சந்திக்கிறார்.
ரஷ்ய வீராங்கனை அன்னா சக்வெடாட்சேயை அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் 6- 0, 6- 7, 6- 4 என்று போராடி வீழ்த்தி காலிறுதியில் ராத்வான்ஸ்காவை சந்திக்கிறார்.
செர்பிய நட்சத்திர வீராங்கனையான அனா இவானோவிச் 1- 6, 6- 3, 4- 6 என்ற செட்களில் போலந்து வீராங்க்னை அக்னீயெஸ்கா ராத்வான்ஸ்காவிடம் வீழ்ந்தார். இதனால் ராத்வான்ஸ்கா காலிறுதியில் நுழைந்தார்.
இத்தாலி வீராங்க்னையான ஃபிளேவியா பன்னெட்டாவை எதிர்கொண்ட ரஷ்ய வீராங்கனை குஸ்னெட்சோவா, அவரை 6- 3, 3- 6, 6- 0 என்ற செட்களில் வீழ்த்தி காலிறுதியில் ஜெலெனா ஜான்கோவிச்சை சந்திக்கிறார்.
செர்பிய நட்சத்திரம் ஜெலெனா ஜான்கோவிச், 6- 1, 1- 0 என்று முன்னிலை பெற்றிருந்தபோது உக்ரெய்ன் வீராங்கனை பொன்டாரென்கோ உடல் நலமின்மையால் வெளியேற நேரிட்டதால் ஜெலெனா ஜான்கோவிச் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
செரீனா வில்லியம்ஸை வீழ்த்திய பாட்டி ஸ்னைடர் 3- 6, 0- 6 என்ற செட் கணக்கில் ஈஸ்டோனியா வீராங்கனை கையா கனேபியிடம் வீழ்ந்தார், இதனால் கனேபி காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் டென்மார்க்கின் வளரும் நட்சத்திரமான கரோலின் வோஸ்னியாக்கியை 6- 2, 6- 2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பெலாரஸ் வீராங்கனை அஸரென்கா காலிறுதிக்குள் நுழைந்தார்.