மெல்போர்ன்: ஆஸ்ட்ரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் நுழைந்தார். இவர் அமெரிக்க வீரர் ஆன்டி ரோடிக்கை அரையிறுதியில் வீழ்த்தினார்.
சற்று முன் முடிந்த இந்த அபார அரையிறுதிப் போட்டியில் 2ஆம் தரவரிசையில் உள்ள ரோஜர் ஃபெடரர், 7ஆம் தரவரிசையில் உள்ள அமெரிக்க வீரர் ஆன்டி ரோடிக்கை 6- 2, 7- 5, 7- 5 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.
முதல் செட்டில் இரண்டு பிரேக்குகளை எடுத்த ரோஜர் ஃபெடரர் அந்த செட்டை மேலும் தன் சர்வ் எதையும் தோற்காமல் 6- 2 என்று கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் ஆன்டி ரோடிக், ஃபெடரர் இருவரது சர்வ்களும் அபாரமாக திகழ ஆட்டம் சில அபாரமான தரை ஷாட்களுக்கு பிறகு 5- 5 என்று சம நிலை எய்தியது.
ஆனால் அப்போது ரோடிக் வீசிய சர்வ்கள் அனைத்தையும் அபாரத் திறமையுடன் எடுத்த ஃபெடரர் மதி நுட்பம் வாய்ந்த சில தரை ஷாட்கள் மூலம் 40 -0 என்ற புள்ளிகள் கணக்கில் பிரேக் செய்தார்.
பிறகு அடுத்ததாக தனது சர்வில் சுலபமாக வெற்றி பெற்று 7- 5 என்று இரண்டாவது செட்டைக் கைப்பற்றினார் ஃபெடரர்.
பின்பு 3-வது செட்டிலும் இருவரும் சவாலான சர்விஸ்களை போட்டு செட்டை 5- 5 என்று சமன் செய்திருந்தனர். அப்போது இரண்டாவது செட் போலவே ரோடிக் ஒரு டபுள் ஃபால்ட்டையும் செய்தார். ஆனால் ஃபெடரரும் அவரது சர்வை அபாரமான முறையில் எதிர் கொண்டு சில தரை ஷாட்களை அதிர்ச்சிகரமாக அடித்தார். மீண்டும் ரோடிக் 5- 6 என்று பின் தங்கினார்.
கடைசி சர்வை ஃபெடரர் வீசி அதில் வெற்றியும் கண்டார்.
இந்த ஆட்டத்தில் ஏஸ் சர்வ்களுக்கு புகழ் பெற்ற ரோடிக் 8 ஏஸ்களை அடிக்க ஃபெடரர் முக்கிய தருணங்களில் அடித்த ஏஸ்களின் எண்ணிக்கை 16 என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு அரையிறுதியில் ஸ்பெயின் வீரர்களான நடாலும், வெர்டாஸ்கோவும் மோதுகின்றனர்.