ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடந்த ஜப்பான் ஓபன் டென்னிஸ் இறுதிச் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்- செக். குடியரசின் லூகாஸ் லூயி இணை தோல்வியைத் தழுவியது.
இறுதிப் போட்டியில் மிகைல் யூஸ்னி (ரஷ்யா)- மிஸ்சா செரிவ் (ஜெர்மனி) இணையுடன் இந்தியாவின் லியாண்டர் பயஸ்- லூகாஸ் லூயி இணை மோதியது.
சுமார் 58 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் மிகைல் இணை 6-3 6-4 என்று நேர் செட்களில் பயஸ் இணையை தோற்கடித்தது. இதனால் தொடர்ச்சியாக 2-வது முறையும் ஏ.டி.பி. பட்டம் வெல்லும் பயஸ் இணையின் கனவு தகர்ந்தது.
முன்னதாக நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் ரோபர்ட் கென்ட்ரிக் (அமெரிக்கா)- ஜர்கோ நீமினென் (பின்லாந்து) இணையுடன் மோதிய பயஸ் இணை 6-4, 7-6 (4) என்ற நேர் செட்களில் வென்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
கடந்த வாரம் தாய்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவுக்கான சாம்பியன் பட்டத்தை பயஸ் - லூயி இணை வென்றது குறிப்பிடத்தக்கது.