பீஜிங் ஒலிம்பிக்கில் இன்று நடந்த ஆடவர் 10 மீட்டர் ஏர்-ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா வென்ற தங்கப்பதக்கம், ஒலிம்பிக் தனி நபர் போட்டியில் இந்தியா வென்றுள்ள முதல் தங்கப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடந்து முடிந்த இறுதிப் போட்டிக்கு தேர்வு பெறுவதற்கான சுற்றில் அபினவ் பிந்த்ரா, 600க்கு 596 புள்ளிகளுடன் தகுதி பெற்றிருந்தார். இதில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் மட்டும் அவர் 104.5 புள்ளிகளைப் பெற்றார். இதன் மூலம் மொத்தம் 700.5 புள்ளிகளுடன் அவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இறுதிப் போட்டியில் நடந்த 10 சுற்றில், பிந்த்ரா 10.7, 10.3, 10.4, 10.5, 10.5, 10.5, 10.6, 10.0, 10.2, 10.8 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக சீனாவின் கினான்-ஷு வெள்ளிப் பதக்கத்தையும், பின்லாந்து வீரர் ஹென்றி ஹக்கினென் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
எனினும், இப்போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான ககன் நரங், ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பைத் தவற விட்டார்.
இப்போட்டியின் 6வது சுற்றில் 9.917 புள்ளிகளுடன் இருந்த ககன் நரங், அடுத்த சுற்றில் 98 புள்ளிகள் மட்டுமே பெற்றார். இதில் மற்ற வீரர்கள் 99 அல்லது 100 புள்ளிகளை எடுத்ததால் ககன் ஒரு புள்ளி வித்தியாசத்தில் இறுதிக்கான வாய்ப்பை இழந்தார்.
இந்தியாவுக்கு 9வது ஒலிம்பிக் தங்கம்: கடந்த 1980ஆம் ஆண்டு மாஸ்கோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி, ஸ்பெயின் அணியை 4-3 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. அப்பதக்கம் ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற 8வது தங்கப்பதக்கம்.
அந்த பதக்கம் வெல்லப்பட்டு 28 ஆண்டுகள் பின்னர் தற்போது அபினவ் பிந்த்ரா 9வது தங்கப் பதக்கத்தை இந்தியாவுக்காக வென்றுள்ளார்.
முதல் தனிநபர் தங்கம்: இதுவரை இந்தியா 8 தங்கப்பதக்கங்களை வென்றிருந்தாலும், அவை அனைத்து குழு போட்டிகளில் (அனைத்து ஹாக்கியில்) மட்டும் வெல்லப்பட்டிருந்த நிலையில், இன்று அபினவ் பிந்த்ரா முதன் முறையாக தனிநபருக்கான தங்கப்பதக்கத்தை வென்று, இந்தியாவின் முதல் தங்கப்பதக்க வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.