சீனாவின் பீஜிங்கில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் டிராப் பிரிவு துப்பாக்கிசுடுதலில் இந்தியாவின் நிச்சய பதக்க நம்பிக்கைகளாக கருதப்பட்ட மானவ்ஜித் சாந்து, மன்ஷிர் சிங் இருவரும் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
இன்று நடந்த டிராப் பிரிவு (trap event) இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான சுற்றில், மானவ்ஜித், மன்ஷிர் இருவரும் தங்கள் திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தத் தவறியதால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தகுதிச்சுற்றில் முதல் 6 இடங்களைப் பிடிப்பவர்களே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். ஆனால் இந்திய நட்சத்திரங்களான மன்ஷிர் 117 புள்ளிகளுடன் 8வது இடத்தையும், மானவ்ஜித் 116 புள்ளிகளுடன் 12வது இடத்தையும் பிடித்ததால் இறுதிக்கான வாய்ப்பை இழந்தனர்.
இப்போட்டியில், முதல் 7 இடங்களைப் பிடித்த வீரர்கள் 121 புள்ளிகள் (இருவர்), 120 புள்ளிகள் (இருவர்), 119 புள்ளிகள் (மூவர்) பெற்றனர்.