பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்களுக்கும், போட்டி அமைப்பாளர்கள், சீன மக்களுக்கும் புத்த மதத் தலைவர் தலாய் லாமா தனது வாழ்த்துக்ககளைத் தெரிவித்துள்ளார்.
பீஜிங் ஒலிம்பிக் போட்டிகள் நாளை துவங்கவிருப்பதை முன்னிட்டுத் தலாய் லாமா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "பீஜிங்கில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கும், போட்டி அமைப்பாளர்களுக்கும், மக்கள் சீனக் குடியரசிற்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
"ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்று சீன அரசு விண்ணப்பித்த நாள் முதல், நான் அதை ஆதரித்து வருகிறேன். இந்த நாள் 130 கோடி சீன மக்களுக்கும் மிகப்பெரிய பெருமையைக் கொடுத்துள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளின் குறிக்கோளான அமைதி, வெளிப்படை, நட்புணர்வு ஆகியவற்றை, இந்த விளையாட்டுக்கள் முன்னெடுத்துச் செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள தலாய் லாமா, பீஜிங் ஒலிம்பிக் போட்டிகள் வெற்றிபெற வேண்டும் என்று தான் வாழ்த்துவதாகவும், அதற்காகப் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.