Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியன் முஜாகிதீன் இயக்க தலைவன் கைது - பரபரப்பு தகவல்கள்

இந்தியன் முஜாகிதீன் இயக்க தலைவன் கைது - பரபரப்பு தகவல்கள்
, புதன், 26 மார்ச் 2014 (15:52 IST)
தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த இந்தியன் முஜாகிதீன் இயக்க தலைவன் கைது செய்யப்பட்டார்.
Tahseen Akhtar
நாடாளுமன்ற தேர்தலை சீர்குலைக்க இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் சதி செய்து, நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்ற அச்சுறுத்தல் உள்ளதால், அவர்களை சுற்றி வளைத்து கைது செய்யும் நடவடிக்கை டெல்லியில் முடுக்கி விடப்பட்டுள்ளது.
 
அந்த வகையில், நாட்டில் நடைபெற்ற பல்வேறு நாசவேலைகளில் முக்கிய பங்காற்றியவர் என்று கருதப்படுகிற இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தீவிரவாதி ஜியா உர் ரகுமான் என்ற வாக்கஸ், கடந்த 22 ஆம் தேதி காலை ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் கைதானார்.
 
அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து அவரது கூட்டாளிகள் முகமது மெஹ்ருப் (21), முகமது வாக்கர் அசார் என்ற ஹனீப் (21), முகமது சாகிப் அன்சாரி என்ற காலித் (25) ஆகியோர் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டனர்.
 
ஆனாலும் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கம் அரங்கேற்றிய நாசவேலைகளில் மூளையாக செயல்பட்ட தெஹ்சீன் அக்தர் என்ற மோனு தலைமறைவாக இருந்தார். அவரை தேடும் வேட்டையில் டெல்லி காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
 
இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. அவரை டெல்லி சிறப்பு காவல்துறையினர் கைது செய்து விட்டனர். இதை டெல்லி சிறப்பு காவல்துறை படை கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா உறுதி செய்தார். அதே நேரத்தில் மேற்கொண்டு தகவல் எதையும் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார். இருப்பினும் தெஹ்சீன், மேற்கு வங்காள மாநிலத்தில், இந்திய-நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான யாசின் பட்கல் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை தலைமை தாங்கி வழிநடத்தி வந்தவர்தான் இந்த தெஹ்சீன். இவரை பற்றிய தகவல்களை சொல்வோருக்கு ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
 
ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட வாக்கஸ், அவரது கூட்டாளிகள் மூவர் என நால்வரும் இந்த தெஹ்சீன் சொல்படிதான் செயல்பட்டு வந்தனர்.
 
தெஹ்சீன் கைது நடவடிக்கை, டெல்லி போலீசுக்கு கிடைத்துள்ள அடுத்த வெற்றி. இதன்மூலம் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் முன்னணி நபர்கள் அனைவரும் (யாசின் பட்கல், தெஹ்சீன் அக்தர், அசத்துல்லா அக்தர், ஜியா உர் ரகுமான் என்ற வாக்கஸ்) கைது செய்யப்பட்டு விட்டனர். 
 
கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணையில் கிடைத்துள்ள தகவல்கள் குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 
 
யாசின் பட்கல், அசத்துல்லா அக்தர் என்ற ஹத்தி ஆகிய இருவரும் இந்திய-நேபாள எல்லையில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். ஜியா உர் ரகுமான் என்ற வாக்கஸ், தெஹ்சீன் ஆகிய இருவரும் காவல்துறை வலையில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வந்தனர். இப்போது ஒருவர் பின் ஒருவராக இருவரும் வசமாக காவல்துறை வலையில் சிக்கி விட்டனர்.
 
2010 ஆம் ஆண்டு வாக்கஸ், நேபாளத்தில் இருந்து பீகார் மாநிலம், தார்பங்காவுக்கு வந்தார். அங்கே அவர் யாசின் பட்கலையும், இந்தியன் முஜாகிதீன் இயக்க முன்னணியினரையும் சந்தித்தார். இந்த கும்பலினர் ஒன்றிணைந்து டெல்லியில் 2010 செப்டம்பர் 19 ஆம் தேதி ஜூம்மா மசூதி தாக்குதலை நடத்தினர். அதன் பின்னர் வாக்கஸ் பீகார் திரும்பி விட்டார். 
 
தெஹ்சீன் அக்தர், யாசின் பட்கல், அசத்துல்லா அக்தர், வாக்கஸ் ஆகியோர் 2011 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி மும்பை ஜாவேரி பஜார், ஓபரா அவுசில் தொடர் குண்டுவெடிப்புகளையும், புனேயில் 2012 ஆகஸ்டு 1 ஆம் தேதி தொடர் குண்டுவெடிப்புகளையும் நடத்தினர். அதன்பின்னர் வாக்கசும், ஹத்தியும் மங்களூரில் போய் பதுங்கி விட்டனர்.
 
மங்களூரில் இருந்து வாக்கஸ், ரியாஸ் பட்கல் அறிவுரைகளை கேட்டு ஐதராபாத்தில் குண்டுவெடிப்புகள் நடத்த தயார் ஆகினர். 2013 பிப்ரவரி தொடக்கத்தில் வாக்கஸ், ஹத்தி இருவரும் ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கே அவர்களுடன் தெஹ்சீன் சேர்ந்துகொண்டார். இவர்கள் ஒன்றுசேர்ந்து 2013 பிப்ரவரி 21 ஆம் தேதி ஐதராபாத் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தினர். அதன்பின்னஸ் வாக்கஸ், மங்களூர் திரும்பி சில காலம் அங்கிருந்தார். 
 
யாசின் பட்கலும், ஹத்தியும் கைது செய்யப்பட்டுவிட்டனர் என்ற தகவல் அறிந்ததும், வாக்கசையும், தெஹ்சீனையும் மங்களூரில் இருந்து தப்பிவிடும்படி ரியாஸ் பட்கல் (இந்தியன் முஜாகிதீன் இயக்க நிறுவனர்களில் ஒருவர்) அறிவுறுத்தினார்.
 
அதைத்தொடர்ந்து வாக்கஸ் மூணாறுக்கு சென்றார். அங்கே வாடகைக்கு வீடு பிடித்து குடியேறியதுடன், சிறிது காலம் ஒரு டீக்கடையில் வேலை பார்த்தார். தெஹ்சீன் அங்கு சென்று சிறிது காலம் வாக்கசுடன் இருந்தார். பின்னர் வாக்கஸ் அங்கிருந்து ஒடிசா, மேற்கு வங்காளம், மராட்டியம் என சுற்றினார். எங்கிருந்தாலும் ரியாஸ் பட்கலுடனும், தெஹ்சீனுடனும் தொடர்பில் இருந்தார்.
 
தெஹ்சீனின் அறிவுரையின்படி, ஒரு நாசவேலையில் ஈடுபடுவதற்காக வாக்கஸ், ராஜஸ்தானில் அஜ்மீர் வந்திறங்கியபோதுதான், கடந்த 22 ஆம் தேதி காவல்துறை பிடியில் சிக்கினார்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
கைது செய்யப்பட்ட தெஹ்சீனிடம் டெல்லி காவல்துறையினர் துருவித்துருவி விசாரணை நடத்துகின்றனர். விசாரணை முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதற்கிடையே ராஜஸ்தானில், ஏற்கனவே கைதான தீவிரவாதி முகமது சாகிப் அன்சாரியின் கூட்டாளி பர்க்கத் அலி நேற்று கைது செய்யப்பட்டார். இவர் கடந்த சனிக்கிழமையன்று காவல்துறை வேட்டையில் தப்பிய ஆசாமி ஆவார். அன்சாரிக்கு பர்க்கத் அலி வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள், டெட்டனேட்டர்கள் சப்ளை செய்து வந்திருக்கிறார்.
 
அவரிடமிருந்து கையினால் வரையப்பட்ட வரைபடங்கள், குண்டு தயாரிப்பது எப்படி என விளக்கும் டைரி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. ஜோத்பூரில் தொடர் குண்டுவெடிப்புகள் நடத்த இந்த கும்பல் தீட்டி இருந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil