கட்டக்கில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் உச்சகட்ட நாடகத்திற்குப் பிறகு இந்தியா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் 7 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது.
உமேஷ் யாதவ் 49வது ஓவரின் 5வது பந்தை அதாவது சாமி வீசிய பந்தை நேராக பவுண்டரி அடித்து விறுவிறுப்பான டென்ஷனான ஆட்டத்தை வெற்றியாக மாற்றினர்.
ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சேவாக், கோலி பவுல்டு ஆன அபாரமான பந்துகள் தவிர மற்றபடி அனைவரும் விக்கெட்டுகளை தூக்கி எறிந்தனர். ரோஹித் ஷர்மா அபாரமாக விளையாடினார்.
அவர் 99 பந்துகளில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 72 ரன்கள் எடுத்து முக்கியமான தருணத்தில் ஆட்டமிழந்தார். அவரும் வினய் குமாரும் இணைந்து 8வது விக்கெட்டுக்காக 42 ரன்கள் சேர்த்தது வெற்றிக்கு ஒருவகையில் வித்திட்டது என்றே கூறவேண்டும்.
ஆனால் ரோஹித், வினய் குமார் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப கடைசியில் ஆட்டம் வருண் ஆரோன், உமேஷ் யாதவ் கையில் மாட்டியது. சில பல தமாஷான காட்சிகளுக்குப் பிறகு வருண் ஆரோன் ஒரு அபாரமான பவுண்டரி அடித்தார். அதே ஓவரின் 5வது பந்தில் உமேஷ் யாதவ் வெற்றிக்கான பவுண்டரியை அடித்தார்.
முன்னதாக சைட் ஸ்க்ரீன் பக்கத்தில் ரசிகர்கள் தொல்லை இருந்ததால் கவனச்சிதறல் காரணமாக கோலி, ரெய்னா, சேவாக் ஆகியோர் ஆட்டமிழந்தனர். குறிப்பாக கோலி பவுல்டு ஆகும் முன்பு நீண்ட நேரம் ஆட்டம் தடைபட்டது.
கிமார் ரோச், கம்பீர், படேல், கோலி விக்கெட்டுகளை வீழ்த்தினார், ரசல் சேவாகை வீழ்த்த ரெய்னாவும் 5 ரன்களில் வெளியேற இந்தியா 59/5 என்று ஆனது.
அதன் பிறகு ஜடேஜா (38) அபாரமாக விளையாட இவரும் ரோஹித் ஷர்மாவும் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 83 ரன்களைச் சேர்த்ததுதான் வெற்றிக்கான அடிப்படை காரணம். ஜடேஜாவும் வேஸ்டாக ஆட்டமிழந்தார். அஷ்வின் ஓடுவதில் மந்தமாக இருந்ததால் இரண்டாவது ரன்னை எடுக்கத் தயக்கம் காட்டி ரன் அவுட் ஆனார்.
அதன் பிறகுதான் வினய் குமாரும், ரோஹித் ஷர்மாவும் அந்த முக்கியமான 42 ரன்களை எடுத்து ஸ்கோரை 201 ரன்களுக்கு உயர்த்தினர். அதன் பிறகுதான் டிராமா துவங்கியது ஆனால் இளம் வீரர்களான உமேஷ் யாதவ், வருண் ஆரோனின் சில நகைச்சுவையான ஆட்டங்களுக்குப் பிறகு வெற்றிக்குச் சென்றது இந்தியா.
5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1- 0 என்று முன்னிலை பெற்றுள்ளது. ஆட்டநாயகனாக ரோஹித் ஷர்மா தேர்வு செய்யப்பட்டார்.