கிங்ஸ்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது.
முதல் இன்னிங்சில் இந்திய அணி 246 ரன்களும், மேற்கிந்திய தீவுகள் அணி 173 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 73 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 256 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திராவிட் 112 ரன்கள் எடுத்தார்.
326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று 4வது நாள் ஆட்டம் நடந்தது. மேற்கொண்டு 195 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு, இந்திய பவுலர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்து திணறடித்தனர்.
இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 262 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக பிராவோ 41 ரன்னும், ராம்பால் 34 ரன்னும், சந்தர்பால் 30 ரன்னும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் பிரவீண்குமார், இசாந்த் சர்மா தலா 3 விக்கெட்டுகளும், மிஸ்ரா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக திராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.