ஜூலை 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறும் ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதியளிக்காதது குறித்து பேச்சு வார்த்தை நடத்துவோம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
12 இந்திய வீரர்கள் ஸ்ரீலங்கா பிரிமியர் லீகில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் ஒப்பந்தம் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் பெயரில் அல்லாமல் சோமர்செட் என்டெர்டெய்ன்மென்ட் என்ற தனியார் நிறுவனத்தின் பேரில் இருப்பதால் இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
"தனியார் நிறுவனம் நடத்தும் கிரிக்கெட் தொடர்களுக்கு அனுமதி வழங்க இயலாது" என்று ஷஷான்க் மனோகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு தெரிவித்து விட்டோம் என்றும் ஷஷான்க் மனோகர் தெரிவித்தார்.
சோமர்செட் என்டெர்டெய்ன்மென்ட் நிறுவனம் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மார்க்கெட்டிங் நிறுவனம் என்று அர்ஜுனா ரணதுங்கா தெரிவித்தார்.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் இந்திய வாரியத்துடன் பேச்சு நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ளது.