மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா, இன்று 3வது ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் வெற்றி பெற்றால் இந்தியா தொடரை கைப்பற்றிவிடும்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்து 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் 3வது ஒரு நாள் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர்விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. விராட் கோக்லி, பார்த்தீவ் பட்டேல், தவான், ரெய்னா, ரோகித் ஷர்மா, பத்ரிநாத் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள், இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் ஏதாவது ஒன்றில் தங்களது முத்திரையை பதித்து இருக்கிறார்கள். பந்து வீச்சில் முனாப்பட்டேல், அமித் மிஸ்ரா ஆகியோர் வலு சேர்க்கிறார்கள்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இது வாழ்வா-சாவா? ஆட்டமாகும். இதில் தோற்றால் தொடரை இழக்க வேண்டி வரும் என்பதால், முழு மூச்சுடன் விளையாட முயற்சிப்பார்கள். ஆனால் தொடக்கம் ஓரளவு நன்றாக இருந்தாலும், முடிவு அந்த அணிக்கு சொதப்பலாகி விடுகிறது. முதல் 2 ஆட்டங்களிலும் இதனை காண முடிந்தது.
இந்த முறை இது போன்ற தவறுகளை திருத்திக்கொண்டு, புதிய விïகங்களுடன் களம் இறங்குவார்கள். இந்த மைதானத்தில் இந்திய அணி விளையாட இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த போட்டியின் போது மழை குறுக்கீடு இருக்க வாய்ப்பு உள்ளது. மழை பெய்ய 30 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டென்கிரிக்கெட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இந்தியா: ரெய்னா (தலைவர்), ஷிகர் தவான், பார்த்தீவ் பட்டேல், விராட் கோக்லி, பத்ரிநாத், சுரேஷ் ரெய்னா, ரோகித் ஷர்மா, யூசுப்பதான், ஹர்பஜன்சிங், பிரவீன்குமார், அமித் மிஸ்ரா, முனாப்பட்டேல்.
மேற்கிந்திய தீவு: டேரன் சமி (தலைவர்), கார்ல்டன் பாக், தேவேந்திர பிஷூ, டேரன் பிராவோ, கிர்க் எட்வர்ட்ஸ், டான்சா ஹியாத், அந்தோனி மார்ட்டின், பொல்லார்ட், கெமார் ரோச், ஆண்ட்ரே ரஸ்செல், சாமுவேல்ஸ், சர்வான், லென்டில் சிம்மன்ஸ்.