ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. 8 வெற்றி பெற்றுள்ள சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.
சென்னை சேபாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பூவா தலையா வென்று முதலில் பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக அணித் தலைவர் தோனி 63 ரன்னும், பத்ரிநாத் 55 ரன்னும், விஜய் 35 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 18 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக பத்தான் 44 ரன்கள் எடுத்தார். வேணுகோபால் (30), ஓஜா (25), வார்னர் (21) ஆகியோர் ஓரளவு ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை.
31 பந்தில் 63 ரன் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் தோனி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
12 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் 8 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.
தற்போது புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தில் உள்ளது. மும்பை 2வது இடத்திலும், பெங்களூர் 3வது இடத்திலும், கொல்கத்தா 4வது இடத்திலும் உள்ளது.