ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் அதிரடி சதத்தால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பணியை 85 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீழ்த்தியது.
பெங்களூரில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.
அதிரடியாக விளையாடிய கிறிஸ் கெய்ல் 49 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். இதில் 10 பவுண்டரி, 9 சிக்சர்கள் அடங்கும்.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்ளே எடுத்தது.
அதிகபட்சமாக மெக்லரன் 28 ரன் எடுத்தார். வல்தாட்டி (21), தினேஷ் கார்த்திக் (20) ஆகியோர் சொற்ப ரன்கள் எடுத்தனர். இதையடுத்து பெங்களூர் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் கெய்ல் கலக்கினார். 4 ஓவர்கள் பந்து வீசி 21 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆல் ரவுண்டராக ஜொலித்து ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
அவர் ஆடிய 4 ஆட்டங்களிலும் பெங்களூர் அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.