நாக்பூரில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஏ-பிரிவு ஆட்டத்தில் நியூஸீலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்ட்ரேலியா பந்தாடியது. 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஜான்சன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
நியூஸீலாந்து 45.1 ஓவர்களில் 206 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மீண்டும் பேட் செய்த ஆஸ்ட்ரேலியா வாட்சன், ஹேடின் ஆகியோரின் அபாரமான அதிரடித் துவக்கத்தினால் 34 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
ஹேடினும், வாட்சனும் முதுகெலும்பற்ற நியூஸீலாந்து பந்து வீச்சை தங்கள் மன விருப்பத்தின் படி ஆடினர். இருவரும் இணைந்து 18 ஓவர்களில் 133 ரன்கள் சேர்த்தனர்.
ஹேடின் (62), வாட்சன் (55) ஆகியோர் விக்கெட்டுகளை ஹாமிஸ்க் பென்னெட் வீழ்த்தினார். 136/2 என்ற நிலையில் இன்னும் ஓரிவு விக்கெட்டுகள் விழுந்தால் ஒரு நல்ல போட்டியாகவாவது இது அமையும் என்ற ரசிகர்களின் ஆர்வத்திற்கு நியூஸீலாந்து எந்த வித தீனியும் போடவில்லை.
ரிக்கி பாண்டிங் மீண்டும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை. அவர் 12 ரன்கள் எடுத்திருந்தபோது வேகப்பந்து வீச்சாளர் சவுத்தீயின் பந்தில் பிரெண்டன் மெக்கல்த்தினால் அருமையாஅக ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
கடைசியில் மைக்கேல் கிளார்க் 4 பவுண்டரிகளுடன் 24 ரன்களையும், கேமரூன் ஒயிட் 28 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தும் வெற்றிக்கு எளிதில் இட்டுச் சென்றனர்.
நியூஸீலாந்தின் பேட்டிங் போலவே பந்து வீச்சும் படு மட்டமாக அமைந்தது. அங்கும் இங்கும் வீசி மொத்தம் 29 வைடுகளை வீசினர்.
வெட்டோரி, நேதன் மெக்கல்லம் உட்பட எந்த ஒரு பந்து வீச்சாளரும் இன்று சோபிக்கவில்லை என்பதோடு, எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அயர்லாந்தும், ஹாலந்தும் நல்ல முறையில் ஆடி முக்கிய அணிகளாக மாறும் நிலையில், நியூசீலாந்தும், மேற்கிந்திய அணியும் பலவீன அணிகளாக மாறிக் கொண்டிருக்கின்றன.