தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வதற்கு இந்திய அணிக்கே அதிக வாய்ப்புள்ளது என்று அந்த நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் கிளைவ் ரைஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியிடம் தென் ஆப்பிரிக்காவை ஒரு டெஸ்ட் போட்டியில் இருமுறை சுருட்டும் பந்து வீச்சு உள்ளது, ஆனால் தென் ஆப்பிரிக்காவிடம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
நிறவெறித் தடைகளுக்குப் பிறகு இந்தியாவின் முயற்சியால் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு தென் ஆப்பிரிக்கா வந்த போது கிளைவ் ரைஸ் தலைமையில்தான் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டது.
டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல் ஆகியோருக்கு இந்தியாவின் பலமான பேட்டிங் வரிசையைக் குலைக்கும் நெருக்கடி உள்ளது. ஏனெனில் அவர்கள் தங்களிடையே நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியா போன்ற பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையை இருமுறை வீழ்த்த அவர்கள் இருவரை மட்டும் நம்பியிருப்பது தென் ஆப்பிரிக்காவுக்குச் சாதகமாக இல்லை.
மேலும் பயிற்சியாளர் கேரி கர்ஸ்டனின் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ஆட்டக்களச் சூழல் பற்றிய அறிவும், அவரது பயிற்சி நிர்வாகத்திறனும் இந்தியாவுக்குத்தான் வெற்றி வாய்ப்பு என்பதை எனக்கு அறிவுறுத்துகிறது என்று கூறியுள்ளார் கிளைவ் ரைஸ்.
மேலும் கிரேம் ஸ்மித் அணியில் இருந்தாலும் ஜோஹன் போத்தாவைத்தான் கேப்டன் பொறுப்பில் நியமிக்கவேண்டும் என்று ரைஸ் கருதுவதோடு, அவரிடம் நல்ல சுழற்பந்துத் திறமை உள்ளது மேலும் அவரது தலைமையின் கீழ் தென் ஆப்பிரிக்கா அணி அனைத்து தரப்பிலும் சிறந்து விளங்கியது என்றார்.