இந்தியாவின் நவீன கிரிக்கெட் கேப்டன் என்று வர்ணிக்கப்படும் எம்.எஸ். தோனி விஜய் மல்லையாவின் யு.பி. குழுமத்துடன் ரூ.26 கோடி பெறுமான விளம்பர ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.
தோனி 3 ஆண்டுகால ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாகச் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"உலகக் கோப்பை கிரிக்கெட் பிப்ரவரியில் துவங்குவதற்கு சற்று முன் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்." என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாகப் பத்திரிக்கைச் செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த மெகா விளம்பர ஒப்பந்தம் மூலமாக ஹிந்தி நடிகர் ஷாரூக்கானின் விளம்பர ஒப்பந்த உயர்வை எட்டியுள்ளார் தோனி.
இருவருக்கும் முன்பு அமீர் கான் உள்ளார். இவர் இந்த ஆண்டின் துவக்கத்தில் டெலிகாம் நிறுவனம் எடிசலட்டுடன் ரூ.30 கோடி ஒப்பந்தம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோனி மெக்டுவல்ஸ் சோடாவிற்கு விளம்பரம் செய்வார் என்ற போதிலும் இது ஒருங்கிணைந்த ஒப்பந்தம் என்பதால் விளம்பரங்களைத்தாண்டியும் தோனியின் செயல்பாடு விளங்கும் என்று செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே தோனியின் அனைத்து விளம்பரவருவாய் விவகாரங்களைக் கவனித்துக் கொள்ள தோனியுடன் ரூ.210 கோடி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள ரித்தி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் நிறுவனம் மூலம் இந்த யு.பி.நிறுவன ஒப்பந்தமும் கையெழுத்தாகவுள்ளது.
யு.பி. நிறுவனத்திற்கு முன்னால் தோனியின் மிகப்பெரிய விளம்பர ஒப்பந்தம் ரீபாக் நிறுவனத்துடனானது. அதாவது ரூ.29-30 கோடி ஒப்பந்தம் செய்து கொண்டார் தோனி.
சுமார் 22 பிராண்ட்களுக்கு தோனி விளம்பரம் செய்துவருவதாகத் தெரிகிறது.