குவஹாத்தியில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் வீரத் கோலியின் அபார சதமும், யுவ்ராஜ், அஷ்வின், ஸ்ரீசாந்த் ஆகியோரின் அபாரப் பந்து வீச்சும் இந்திய அணிக்கு 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுத் தந்தது.
277 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய நியூஸீலாந்து கடைசியில் 45.2 ஓவர்களில் 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஸ்ரீசாந்த் கடைசியில் நேதன் மெக்கல்லம், மற்றும் கைல் மில்ஸ் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்த நியூஸீலாந்து இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
துவக்கத்தில் ஜேமி ஹவ் விக்கெட்டை நெக்ரா வீழ்த்தினார். அவர் எடுத்த ரன்கள் 9. மார்டின் கப்தில் அபாயகரமாக விளையாடினார். இவர் 37 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து அஷ்வின் பந்தில் படேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
46/2 என்ற நிலையிலிருந்து வில்லியம்ஸனும், ராஸ் டெய்லரும் ஸ்கோரை 15 ஓவர்களில் ஸ்கோரை 146 ரன்களுக்கு உயர்த்தினர். ஆனால் இந்த தருணங்களில்தான் அஷ்வினும், யுவ்ராஜும் அபாரமாக வீசினர்.
முதலில் வில்லியம்ஸன் 25 ரன்கள் எடுத்து யுவ்ராஜ் பந்தை கட் செய்ய முயன்று சகாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஸ்டைரிஸ் 10 ரன்கள் எடுத்து யுவ்ராஜிடம் ஆட்டமிழந்தார். அடுத்ததாகக் களமிறங்கிய கிராண்ட் எலியட் 5 ரன்கள் எடுத்து ஸ்ரீசாந்திடம் ஆட்டமிழந்தார். அபாய வீரர் டேரல் டஃபியையும் யுவ்ராஜ் வீழ்த்தினார்.
இடையே டெய்லர் அபாரமாக சிக்சர்களை யூசுப் பக்த்தான் பந்தில் விளாசினார். 3 பவுண்டரிகளையும் அடித்து அவர் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஷ்வின் பந்தில் படேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக விக்கெட் கீப்பர் ஹாப்கின்ஸ் 16 ரன்கள் எடுத்து அஷ்வினிடம் ஆட்டமிழக்க நியூஸீலாந்து 169/8 என்று ஆனது.
எல்லாம் இன்னும் சற்று நேரத்தில் முடிந்து விடும் என்ற எதிர்பார்ப்பு இருக்கையில் நேதன் மெக்கல்லமும், கைல் மில்ஸும் இணைந்து அடுத்த பவர் பிளேயில் 5 ஓவர்களில் 34 ரன்கள் விளாசி அச்சுறுத்தினர்.
இருவரும் இணைந்து 10 ஓவர்களில் 67 ரன்களைச் சேர்த்து 45வது ஓவரில் 236 ரன்கள் எடுத்திருந்தனர். அதாவது வெற்றி பெற 5 ஓவர்களில் 41 ரன்கள் இருக்கின்றன.
அப்போது கௌதம் கம்பீர் அபாரமான கேட்ச் மூலம் நேதன் மெக்கல்லமை வெளியே அனுப்ப நியூஸீலாந்து இன்னிங்ஸ் அடுத்த பந்தில் முடிவுக்கு வந்தது.
மெக்கல்லம் 35 ரன்களையும் கைல் மில்ஸ் 28 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 32 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
நியூஸீலாந்து 45.2 ஓவர்களில் 236 ரன்களுக்குச் சுருண்டது.
இந்திய அணியில் முனாஃப் படேல் துவக்கத்தில் 6 ஓவர்களில் 19 ரன்கள் கொடுத்து சிக்கனம் காட்டினார். ஆனால் முடிவில் 2 ஓவர்களில் 13 ரன்களைக் கொடுத்தார் இவருக்கு விக்கெட்டுகள் இல்லை.
அஷ்வின் 10 ஓவர்களில் 50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், யுவ்ராஜ் சிங் 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஸ்ரீசாந்த் 5.2 ஓவர்களில் 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். யூசுப் பத்தான் பந்து வீச்சில் சோபிக்க வில்லை. அவர் 2 ஓவர்களில் 24 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
ஆட்ட நாயகனாக தொடர்ச்சியாக 2வது ஒரு நாள் சதம் எடுத்த விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.