ஹைதராபாதில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் உத்திரப்பிரதேச அணிக்கு எதிராக மும்பை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் எடுத்துள்ளது. உ.பி. அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ரோஹித் ஷர்மா 113 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இவருடன் மும்பை அணியை சரிவிலிருது மீட்ட ஏ.எம். நாயர் 99 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்கும்போது 55/4 என்று இருந்த மும்பை அணியை ரோஹித் ஷர்மாவும், நாயரும் 262 ரன்களுக்கு உயர்த்தினர்.
13 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 99 ரன்கள் எடுத்திருந்த நாயர் அப்போது பி.குமார் பந்தில் எல்.பி.டபிள்.யூ. ஆனார்.
அடுத்த பந்திலேயே சாய்ராஜ் பஹுதுலே ஆட்டமிழந்தார். அதன் பிறகு அகார்கரும், ஷர்மாவும் எண்ணிக்கையை 297 ரன்களுக்கு உயர்த்தினர்.
ரோஹித் ஷர்மா தனது இயல்பு மாறாத ஆட்டத்தை வெளிப்படுத்தி அற்புதமான சில பவுண்டரிகளுடன் 113 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.