சிட்டகாங் மைதானத்தில் நடைபெறும் வங்கதேச-இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 75/4 என்று சரியும் அபாயத்திலிருந்த அணியை இலங்கை வீரர் தில்ஷான் அதிரடி 162 ரன்களால் மீட்டார். இலங்கை முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் எடுத்துள்ளது.
இவருடன் உறுதுணையாக விளையாடிய கபுகேதராவும் அதிரடி முறையில் விளையாடி 93 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
பூவாதலையா வென்ற இலங்கை முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. ஆனால் மோர்டசா வீசிய 4ஆவது பந்திலேயே துவக்க வீரரும் விக்கெட் கீப்பருமான ஜெயவர்தனே எல்.பி.டபிள்யூ. ஆனார்.
ஆனால் இலங்கை அணிக்கு இதை விட பெரிய அதிர்ச்சி மோர்டசா வீசிய 3ஆவது ஓவரில் காத்திருந்தது. இலங்கையின் சிறந்த பேட்ஸ்மென் என்று கருதப்படும் சங்கக்காரா 5 ரன்களில் பவுல்டு ஆனார்.
அதன் பிறகு வர்ணபுராவும், கேப்டன் ஜெயவர்தனேயும் ஸ்கோரை 39இற்கு உயர்த்தினர். அப்போது 11 ரன்கள் எடுத்த ஜெயவர்தனே ஷாகிப் அல் ஹஸன் பந்தில் ஆட்டமிழந்தார்.
பிறகு திலன் சமரவீராவும் வர்ணபுராவும் இணைந்து 36 ரன்களை சேர்த்து ஸ்கோரை 75 ரன்களுக்கு உயர்த்தினர். அப்போது 19 ரன்கள் எடுத்திருந்த சமரவீரா வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹொசைனிடம் பௌல்டு ஆனார். இலங்கை 75/4 என்று தடுமாறியது.
அப்போது களமிறங்கினார் திலக ரத்னே தில்ஷான். வந்தது முதலே அதிரடியாக விளையாடினார் தில்ஷான். ஷகாதத் ஹொஸைனின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளையும் ஒரு ஃபிளிக் சிக்சரையும் அடித்து அதிரடித் துவக்கம் கண்டார்.
அதன் பின்பும் அவர் அடங்கவில்லை தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வர்ணபுராவுடன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 24 ஓவர்களில் 119 ரன்களைச் சேர்த்தார். அப்போது 63 ரன்கள் எடுத்திருந்த வர்ணபுரா, அஷ்ரஃபுல் பந்தில் ஆட்டமிழந்தார். 194/5 என்ற ஸ்கோரில் கபுகேதரா இணைகிறார்.
93 பந்துகளில் தில்ஷான் தனது சதத்தை 14 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் எடுத்து முடித்தார். சதம் முடிந்தவுடனும் அவர் அதிரடியை நிறுத்த வில்லை. 165 பந்துகளில் 21 பவுண்டரிகளுடன் அவர் 162 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரும் கபுகேதராவும் 6-வது விக்கெட்டுக்காக 173 ரன்களை 33 ஓவர்களில் சேர்த்தனர்.
உணவு இடைவேளைக்கும் தேனீர் இடைவேளைக்கும் இடையே 164 ரன்களை இருவரும் குவித்தனர். அதன் பிறகும் 142 ரன்களை சேர்த்தது இலங்கை.
ஆட்ட நேர இறுதியில் கபுகேதரா 117 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 93 ரன்களுடன் களத்தில் உள்ளார். சமிந்தா வாஸ் 1 ரன் எடுத்து களத்தில் உள்ளார்.
வங்கதேச அணியில் மோர்டசா 2 விக்கெட்டுகளையும், ஷகாதத், ஷாகிப், எனாமுல் ஹக், அஷ்ரஃபுல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.