டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்கள்: சச்சின் வரலாற்று சாதனை!
, வெள்ளி, 17 அக்டோபர் 2008 (18:00 IST)
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 12 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற வரலாற்றுப் பெருமையை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் இன்று நிகழ்த்தியுள்ளார்.
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக மொஹாலியில் நடந்து வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், அதிக ரன் எடுத்த லாராவின் சாதனையை (11,953 ரன்கள்) முறியடித்த பின்னர் தொடர்ந்து அபாரமாக விளையாடிய சச்சின், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 50வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.அடுத்தடுத்து ரன்களை விரைவாக சேகரித்த சச்சின், இன்னிங்சின் 73வது ஓவரின் போது 12 ஆயிரம் ரன்களைக் கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
கங்கூலி 7 ஆயிரம்: மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த சவுரவ் கங்கூலி அரைசதம் எடுத்தார். இன்றைய போட்டியில் 7 ஆயிரம் ரன்களைக் அவர் கடந்துள்ளார்.
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவதாக கங்கூலி அறிவித்துள்ள நிலையில், அவர் 7 ஆயிரம் ரன்களைக் கடந்ததுடன், அரைசதமும் பூர்த்தி செய்துள்ளது அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.