கொழும்புவில் இலங்கைக்கு எதிரான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்தியா 2வது இன்னிங்சில் 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இப்போட்டியில் இலங்கை அணிக்கு 121 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.
போட்டியின் 4ம் நாளான இன்று 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன் என்ற நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய திராவிட்-லஷ்மண் இணை, இலங்கை பந்துவீச்சை சமாளித்து ரன் குவித்தது.
இதில் அபாரமாக விளையாடி அரைசதம் கடந்த திராவிட் 68 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய லஷ்மண் டெஸ்ட் போட்டிகளில் தனது 35வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
கடைநிலை ஆட்டக்காரர்களில் ஹர்பஜன் மட்டுமே 26 ரன் சேர்த்தார். அணித் தலைவர் கும்ப்ளே 9 ரன்னிலும், ஜாகீர்கான், இஷாந்த் சர்மா ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
இன்னிங்சின் 88வது ஓவரில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது. லஷ்மண் 61 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை பந்துவீச்சாளர்களில் முரளிதரன், மெண்டிஸ் தலா 3 விக்கெட்டும், தம்மிகா பிரசாத் 2 விக்கெட்டும், சமிந்தா வாஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
மெண்டிஸ் உலக சாதனை: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட அஜந்தா மெண்டிஸ், 3 டெஸ்ட் போட்டிகளிலும் மொத்தம் 26 விக்கெட்களை வீழ்த்தி புதிய உலக சாதனை (3 டெஸ்ட் கொண்ட தொடரில்) படைத்துள்ளார்.
நேற்றைய ஆட்டத்தில் சச்சின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் இத்தொடரில் தனது 25வது விக்கெட்டை வீழ்த்திய மெண்டிஸ், இன்று திராவிட் விக்கெட்டையும் கைப்பற்றி தனது விக்கெட் எண்ணிக்கையை 26 ஆக உயர்த்தினார்.
கடந்த 1946இல் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர் பெசேர் 24 விக்கெட்டுகள் கைப்பற்றியதே இதுவரை உலக சாதனையாக இருந்தது. தற்போது அஜந்தா மெண்டிஸ் அதனை முறியடித்துள்ளார்.