இந்திய ஒரு நாள் மற்றும் இருபது20 அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு ரசிகைகள் தொடர்ந்து அன்புத் தொந்தரவு கொடுத்து வருவதால், அவரது வீட்டிற்கு 4 பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநில காவல்துறையின் ஆயுதப் படையைச் சேர்ந்த இந்த 4 பெண் காவலர்களும், தோனி வீட்டில் 24 மணி நேர காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுதவிர தோனிக்கு ஏற்கனவே ஜார்க்கண்ட் மாநில அரசின் சார்பில் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண் காவலர்கள் பாதுகாப்பு குறித்து எஸ்.பி. பாட்டியாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, பாதுகாப்பு பணியில் ஆண், பெண் பேதமில்லை என்றாலும், ரசிகைகளை கட்டுப்படுத்துவதில் பெண் காவலர்களுக்கு எந்தவித இடையூறும் இருக்காது என்பதால் இந்த ஏற்பாட்டை மேற்கொண்டதாக அவர் விளக்கினார்.
கொல்கட்டாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த மே 6ஆம் தேதி நடந்த கிரிக்கெட் போட்டியின் போது, 18 வயதான ஹசீனா நஸ்-ரீன் மைதானத்தில் இருந்த பாதுகாப்பை மீறி தோனியை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தோனி வீட்டுக்கு பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், அவரது ரசிகைகள் கலக்கம் அடைந்துள்ளனர்.