1983 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா பெற்ற வெற்றியை நினைவு கூறும் ஆவணத் திரைப்படம் ஒன்றை பிரிட்டனின் செஞ்சுரி டி.வி.யும், பி.பி.சி. வானொலி கிரிக்கெட் வருணனையாளர் ஆஷிஷ் ரே ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
1983 உலகக் கோப்பையை ஸ்பான்சர் செய்த புருடென்ஷியல் காப்பீட்டு நிறுவனம் இந்த ஆவணப் படத்தையும் ஸ்பான்சர் செய்துள்ளது.
அந்த உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிப் பாதையை சில வீடியோ காட்சிகள் மூலம் இந்த ஆவணத் திரைப்படம் அலங்கரிக்கிறது. இது தவிர முக்கிய வீரர்களின் விரிவான நேர் காணல்களும் இடம்பெற்றுள்ளன.
அந்த ஆவண திரைப்படத்திற்கு பேட்டி அளித்துள்ள அப்போதைய அணித் தலைவர் கபில் தேவ், மேற்கிந்திதிய தீவுகளுக்கு எதிரான அந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் தான் பூவாதலையா வென்றிருந்தால் முதலில் மேற்கிந்திய தீவுகளை பேட் செய்ய அழைக்க முடிவு செய்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
இது தவிர வெளியாகாத பல சுவையான இந்திய அணியின் ஓய்வறை செய்திகளும் இந்த ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ளது என்று இதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆவணத் திரைப்படம் 1983 உலகக் கோப்பை வெற்றி 25-வது ஆண்டு கொண்டாட்டங்களின் போது லார்ட்சில் திரையிடப்படவுள்ளது.