ஐ.பி.எல். சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றுவது யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று இரவு மும்பையில் நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த இரண்டு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை படுதோல்வி அடையச் செய்தது. இதேபோல நேற்று முன்தினம் நடந்த அரையிறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டெல்லி அணியை வென்றது.
லீக் போட்டிகளின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 2 முறை தோற்றுள்ளது. அதிலும் இரண்டாவது முறை கடுமையாகப் போராடி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
தற்போது சென்னை அணி பலத்துடன் காணப்படுவதால் ராஜஸ்தான் அணிக்குக் கடுமையான போட்டியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணியில் உள்ள எல்லா வீரர்களும் சிறப்பாக ஆடுவதுதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பலமாகக் கருதப்படுகிறது. ஏற்கெனவே 2 முறை சென்னை சூப்பர் கிங்ஸை வென்றுள்ளதால் இந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.
இதற்கிடையில் நடந்து முடிந்துள்ள இரண்டு அரையிறுதிப் போட்டிகளும் எதிர்பார்த்த அளவிற்கு விறுவிறுப்புடன் அமையாமல் ஒருபக்க ஆட்டமாகவே இருந்ததால், இறுதிப் போட்டியாவது விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.